உலக அதிசயங்களுக்கு சவால் விடும் இந்திய அதிசயம் நாராயண் அக்க்ஷர்தாம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

லண்டனில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் மந்திரம் எனும் இருபதாம் நூற்றாண்டின் 70 அதிசயங்களில் ஒன்றைக் காண இயலாதவர்கள் நம் நாட்டிலேயே கண்டுகளிக்க டெல்லியில் உள்ளது சுவாமிநாராயண் அக்க்ஷர்தாம்.

சுவாமிநாராயண் அக்க்ஷர்தாம் திருக்கோவில் யமுனா நதிக்கரையில் 30 ஏக்கர் பரப்பளவில் நிஜாமுதீன் பாலத்திற்கு சற்று தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 24ல் புதுடில்லியில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலுக்குள் செல்ல பத்து நுழைவாயில்களை கடந்து செல்ல வேண்டும். பக்தி துவார் எனப்படும் முதல் வாயிலில் கடவுள்களின் 208 சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றது. மயூர் துவார் என்பது அடுத்து உள்ள நுழைவாயில். இதிலுள்ள இரட்டை நுழைவாயில்களில் மயில்களை உயிருடன் காண்பதுபோல் நேர்த்தியான 869 சிற்பங்களை காணலாம்.

இரண்டு மயில் நுழைவாயிலுக்கு இடையில் பகவான் சுவாமி நாராயணரின் நினைவாக அழைக்கப்பெற்ற 2 பாத சுவடுகளை காணலாம். வெள்ளைப் பளிங்கில் வடிக்கப்பெற்ற இந்தச் பாதச் சுவடுகளின் மீது கடவுள்களின் 16 புனித இலச்சிகளைக் காணலாம். இந்த பாதச் சுவடுகளின் மீது நான்கு புறமும் எப்பொழுதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

நடுவில் முதன்மை திருக்கோயில் உள்ளது. 129 அடி உயரமும் 375 அடி அகலமும் 315 அடி நீளமுள்ள திருக்கோவில் இது இளஞ்சிவப்பு மணப்பாறை, வெள்ளைப் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப் பெற்று எடுப்பாக விளங்குகிறது. 1070 அடி நீளமுள்ள 3,000 டன் எடையுள்ள இந்த மண்டபத்தில் 148 அழகிய யானைக் கூட்டங்கள் வித விதமான கோணத்தில் மனிதர்கள், விலங்குகளைக் காணலாம்.

தாங்கி நிற்கும் தூண்களில் 200-க்கும் மேற்பட்ட இறைவனின் அவதார வடிவங்களுடன், முனிவர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒன்பது வட்டவடிவமான சிகரங்கள் அதன் உட்புற விதானத்தில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.

திருக்கோவிலில் தங்கத்கட்டிலான 11 அடி உயரமுள்ள பகவான் சுவாமி நாராயணனின் திருவுருவம் அதைத் தொடர்ந்து நான்கு திசைகளிலும் வட்டவடிவமாக ராதாகிருஷ்ணர் சீதா,ராமர், லட்சுமி, நாராயணர், சிவன், பார்வதி ஆகியோரின் திருமேனிகள் பளிங்கில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தூண்களின் உச்சியில் 500 பரமஹம்சரின் திருவுருவங்கள் எழில் கூட்டுகின்றன. மூச்சு முட்டச் செய்யும் 65 அடி உயரமுள்ள மண்டபம், பக்த மண்டபம், ஸ்ம்ருதி மண்டபம், பரமஹம்ச மண்டபம் என அழகான மண்டபங்கள் அமைந்துள்ளன. வெளிப்புற சுவரில் 48 விநாயகரின் அழகு திருமேனிகள் 300க்கும் மேற்பட்ட இருடிகள், ஆசிரியர்கள், அடியவர்களை காணலாம். இந்த வெளிப்புறச்சுவர் 611 அடி சுற்றளவில் நீண்டு 25 அடி உயரத்தில் 4287 சிற்பங்களுடன் அழகாக காட்சி தருகிறது.

திருக்கோவிலின் பீடத்தின் அடியில் மூன்று புறங்களிலும் வரிசையாக 108 கோமுகங்கள் அமைக்கப் பெற்று அதன் வாயிலிருந்து நீர் ஊற்றுபோல வந்து கொண்டிருக்கிறது. திருக்கோவிலின் மூன்று புறங்களும் நீரால் சூழப்பட்டு தீபகற்பம் போல் உள்ளது. இதில் 151 ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கியுள்ளது.

அபிஷேக மண்டபத்தில் குழந்தை யோகி நீலகண்டனின் திருமேனிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை சுற்றி சிவப்புக் கற்களினால் அமைந்த இரண்டடுக்கு மண்டபத்திற்கு 145 சாளரங்கள் உள்ளன. இந்த அழகிய மண்டபத்தை 1152 தூண்கள் தாங்கி 3000 அடி நீண்டு உள்ளது. இந்த கூடத்தைச் சுற்றிலும் கண்களை கவரும் மலர்த் தோட்டங்கள், புல்வெளிகள் பேரெழில் காட்டுகின்றன.

இவை தவிர மூன்று அழகிய கண்காட்சிக் கூடங்கள் அமைந்துள்ளன. முதல் கூடம் ’சகஜானந்த தரிசனம்’. இதில் சர்வதேச மனிதாபிமானத்தின் சின்னங்களான அகிம்சை, துணிவு, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பகவான் சுவாமி நாராயணன் பற்றிய 50 நிமிட படமும் மனிதன் போல் இயங்கும் ரோபோக்களும் ஒலி ஒளி காட்சிகளும் அமைந்துள்ளன.

இரண்டாவது கூடம் ’நீலகண்ட தரிசனம்’. 85-க்கு 65 அடி நீளமுள்ள மிகப் பெரிய அகன்ற திரையில் பதினோரு வயதுக் குழந்தை யோகி நீலகண்டவார்னி என்பவரின் வாழ்க்கை குறித்த 40 நிமிடப் படம் காட்டப்படுகிறது.

மூன்றாவது அரங்கின் பெயர் ’சன்ஸ்கிருதி விஹார்’ என்பது. 15 நிமிட படகுச் சவாரியில் சரஸ்வதி நதியின் கரையில் இந்தியப் பண்பாடுகளை அடிப்படை ஆய்வு செய்து அமைக்கப் பெற்ற உலகின் மிகப் பழமையான வேத காலச் சிற்பங்கள் இந்தியப் பண்பாட்டை எடுத்தியம்புகின்றன.

டெல்லியில் காணவேண்டிய இடங்களில் ஒன்றான அக்க்ஷர்தாம் உண்மையில் ஒரு கலை பொக்கிஷம் ஆகும்.