கொரோனா, பாதிப்பு குறைய தருமையாதீனம் சிறப்பு வழிபாடு, 27ஆம் குருமணிகள் அருளாணை!

இன்றைய காலத்தில் உலகத்தையே அதிர வைக்கும் ஒரே சொல், கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய இதன் பாதிப்பு இன்று இந்தியத் திருநாட்டிற்குள்ளும் புகுந்து பாதிப்புகளை தொடங்கி விட்டது.


இதனை மருத்துவ உலகம் தக்கவாறு எதிர் கொள்கிறது என்றாலும், உயிர்களின் வினைக்கழிவு பொருட்டு பிணியுமாகி பிணிக்குமோர் மருந்துமாகும், இறைவனிடத்தே வழிபாடும் விண்ணப்பமும் செய்தலே இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட தக்க வழி என்று தருமையாதீன 27ஆம் குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சார்ய சுவாமிகள் திருவுளம் கொண்டு அதற்கு தக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

இதன் படி, தருமையாதீன நிர்வாகத்திற்கு உட்பட்ட இருபத்தேழு கோயில்களிலும், திருமடங்களிலும், தருமையாதீன சொக்கநாதர் பூசை மடத்திலும், வைரஸ் தாக்கம் குறையும் வரையும் நோய்த்தீர்க்கும் தேவாரத் திருப்பதிகங்களாக திருஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்கோடு என்னும் கொடிமாடச் செங்குன்றூரில் அருளிச் செய்த,

’அவ்வினைக்கு இவ்வினையாம்’ என்னும் பதிகமும் திருவாலவாயில் அருளிச்செய்த "மந்திரமாவது நீறு" என்னும் பதிகமும் அப்பர்பெருமான் திருவையாற்றில் அருளிச்செய்த "குறுவித்தவா குற்ற நோய்வினை காட்டிக் குறுவித்த நோய் உறுவித்த வா" என்ற பதிகமும்பாடி கூட்டுவழிபாடு செய்ய உத்தரவு செய்துள்ளார்கள்

மேலும் 27 ஆலயங்ளிலும் ஜுரகரேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் ரசம் சாதம் நிவேதித்து சிறப்பு அபிசேக வழிபாடுகள் செய்யவும் உத்தரவு செய்துள்ளார்கள் மேலும் அனைவரும் எங்கும் தூய்மையைப் பேணவும் முகக்கவசம் அணிந்து நடமாடவும் கரங்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொண்டு சுகாதாரமாக வாழவும் தருமையாதீன சன்னிதானங்கள் உலக நன்மையின் பொருட்டு உத்தரவு செய்துள்ளார்கள் ஆதலால், அன்பர்கள் மேற்படி பதிகங்களை ஓதியுய்ந்தும், தூய்மை பேணியும் நன்மையடைவோம் ஆகுக!!