கன்னியாகுமரி அம்மன் அணிந்திருந்த நாகமணி மூக்குத்தி எங்கே..? நாகமணியின் அற்புதம் இதோ...

குமரி அன்னையின் மூக்குத்தி சிறப்புப் பற்றிய செய்தி பலரும் அறிந்ததே.


திருவனந்தபுரம் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மன் தனக்கு நாக வம்சத்தினர் பரிசாக அளித்த அபூர்வ நாகமணியைக் கொண்டு மூக்கு வளையம் ஒன்றை உருவாக்கி அதனை குமரி அம்மனுக்கு காணிகையாக்கியிருக்கிறார்.

மிகவும் பிரகாசமானதாகவும், அதிஅற்புத ஒளி உமிழ்வதாகவும் இருந்ததால் அந்த நாகமணி மூக்கு வளையம். இலங்கையில் இருக்கும் நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் வரை ஒளிவீசுமாம். நாகமணி வெளிச்சத்தை வைத்து நாக லோகத்தில் இருந்து இரவு நேரங்களில் நாகங்கள் வந்து அம்மனை வணங்கிச் செல்லுமாம். அம்மன் கருவறைக்குள் விளக்குகள் ஏற்ற வேண்டிய தேவையே இல்லாத அளவுக்கு வெளிச்சமாக இருக்குமாம்.

அப்போது இந்திய தென்கோடியை அந்நியர்களும், பிறமத மன்னர்களும் கைப்பற்ற துடித்துக் கொண்டிருந்த நேரம். கடற்புறத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த குமரி அம்மன் தனது பக்தர்களை காக்க ஒரு உபாயம் செய்தாளாம். இந்தப் பக்கமாக வாணிபத்து வரும் வணிகர்களுக்கு தனது மூக்குவளையத்திலிருந்து வரும் ஒளியைக் கொண்டு ஊர் இருக்கும் இடத்தை பாதை போல காட்டி கரை இருக்கும் தூரத்தைக் கணித்துக் கொள்ள உதவுவாளாம்.

அதுவே எதிரி நாட்டு போர்க்கப்பல்கள் வரும் பொழுது தனது மூக்குவளையத்தின் ஒளியை ஒரு கலங்கரை விளக்கத்தினைப் போல காட்டி எதிரிக் கப்பல்களை இங்கு கரை ஒதுங்கச் செய்து தரைதட்டிப் போக செய்துவிடுவாளாம். முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இயற்கை நிகழ்வுகளாக இடி மின்னல்கள் கடலின் பயணிப்பவர்கள் மேல் விழாதவாறு தனது நாகமணி மூக்குவளையத்தின் மீது தாங்கிக் கொள்வாளாம் அன்னை.

தற்சமயம் அம்மனிடம் உள்ளது வைர மூக்குத்தியாம். திருடர்கள் கையில் சென்றதா, அந்நியர்கள் கையில் சென்றதா அல்லது கடல் கொந்தளிப்பில் அடித்து செல்லப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த அபூர்வமாக மூக்கு வளையம் எப்படியோ காணாமல் போய்விட்டதாம். பிரசித்தி பெற்ற அந்த நாகமணி மூக்குத்தி காணாமல் போனதால் கிழக்கு வாசலை மூடி வைத்திருக்கிறார்கள்.

குமரி அம்மன் இன்று அணிந்திருக்கும் வைர மூக்குத்தி ஒளி என்னதான் சிறப்பானதாக இருந்தாலும் நாகமணியின் அபூர்வ சக்தி அதற்கு இல்லை. வருடத்தில் நவராத்திரி, விஜயதசமி, ஆடி அமாவாசை, வைகாசி விசாகம் உள்ளிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே கிழக்கு வாயிலானது திறந்து வைக்கப்படுகிறது.