மார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மகம் – கும்பகோணத்தில் மகாமகம் – புனித நீராடத் தவறாதீர்!

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப் படுகிறது


அந்த வகையில், வரும் (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை அதாவது, மாசி 25ம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரத்தில் சிங்க ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும்.

அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

மக நட்சத்திரத்தை "பித்ருதேவ நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன்,பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியதையனது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.

எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மகா ஸ்நானம் " என்கிறது சாஸ்திரம்.

அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும்,பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை சேஷ்த்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது.

சிவபெருமான் வருணனுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் இந்நாள் சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது.

தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளாகவும் உள்ளது.