இது சாதாரண கல் அல்ல! இதன் மகிமை தெரிந்தால் நீங்களும் இந்த கல்லை பூஜை செய்வீர்கள்!

மகாவிஷ்ணுவின் ரூபமாக வீட்டில் பூஜை செய்யக்கூடிய தெய்வீகப் பொருள்களில் ஒன்று சாளக்கிராமம்.


இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.

இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருளுவாராம் மகாவிஷ்ணு.

ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். “என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!” என்று சாபமிட்டாள்.

அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு துளசிக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. “அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன. என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய்.

என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன். இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்” என்றார்.

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் “வஜ்ர கிரீடம்” என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளக்கிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு “ஹிரண்ய கர்ப கற்கள்” என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் இருக்கின்றன.

சாளக்கிராமம் இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளக்கிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகியவை கிட்டும். சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் எம்பெருமானும், சகல இறைசக்திகளும் நித்யம் வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இவை சில வண்ணங்களிலும் கிடைக்கின்றன.

நீலநிற சாளக்கிராம கல் – செல்வத்தையும் சுகத்தையும் தரும்.

பச்சை கல் – பலம், வலிமையைத் தரும்

கருப்பு கல் – புகழ், பெருமை சேரும்

புகைநிறம் – துக்கம், தரித்திரம்

வீட்டில் ஆண்கள் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும். பெண்கள் இதைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது. சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக்கொண்டால் வைகுண்டலோகப் பேறு கிடைக்கும் என்பர். 12 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் சாளக்கிராமம் வைத்து ஆராதிக்கும் இடம் அல்லது இல்லம், திவ்ய தேசமாகவே கருதப்படுகிறது. இத்தகைய இல்லங்களில் எம்பெருமான் நித்யவாசம் புரிகிறார் என்கிறார்கள்