ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி! திமுகவில் திடீரென இணைந்த அதிமுக முக்கிய தலைவர்!

அதிமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் மிக முக்கியமான ஒருவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.


சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக இருந்து வந்தவர் ராஜ கண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

1972ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் ராஜகண்ணப்பன் இருந்து வருகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே அதிமுகவின் சக்தி வாய்ந்த நபராக விளங்கிய இவர் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அமைச்சராக இருந்தார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் எனும் கட்சியைத் துவக்கினார். பிரமாண்ட மாநாடு தனித்துப் போட்டி என உள்ளாட்சித் தேர்தலில் ராஜகண்ணப்பன் தனது பலத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர், ராஜகண்ணப்பனை திமுகவில் இணைத்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட வைத்து எம்எல்ஏ ஆக்கினார்.

அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தினால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். வெறும் 3 ஆயிரத்து நானூறு வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார் ராஜகண்ணப்பன்.

அதன் பிறகு அதிமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ராஜகண்ணப்பனை சுமார் 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார். இதேபோல் 2016 சட்டசபை தேர்தலின் போதும் ஏராளமான தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜகண்ணப்பன் சிறப்பாக செயல்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக அதிமுக தலைவர்களை ஒன்று திரட்டி அதிமுகவை அந்தக் குடும்பத்திடம் இருந்து பறித்த நிர்வாகிகளில் ராஜகண்ணப்பனும் ஒருவர். ஓபிஎஸ்  ஆதரவாளராக திகழ்ந்து வந்த ராஜகண்ணப்பன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  கிடைக்கும் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அதிமுக தலைமை ராஜ கண்ணப்பனுக்கு இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால்  திடீரென அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து ராஜகண்ணப்பன் விலகிய வேகத்தில் திமுகவில் இணைந்ததன் பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் திறமையான வேலை இருப்பதாகக் கூறுகிறார்கள். தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ள யாதவர்கள் ராஜகண்ணப்பனின் தீவிர விசுவாசிகள். இதனால் ராஜகண்ணப்பன் வருகை திமுக கூட்டணிக்கு தென்மாவட்டங்களில் பலத்தை அதிகரித்துள்ளது.