தென்னாப்பிரிக்காவை மிரளவைத்த ரோகித் சர்மா! பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது .

தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அபாரமாக ஆடிய ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்தார். புஜாரா சிறப்பாக விளையாடி 81 ரன்களை எடுத்தார்.இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 2வது இன்னிங்சில் 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்துள்ளது . நாளை இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் தென்ஆப்பிரிக்க அணியின் மீதமுள்ள 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .