சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?

இறந்தபின் எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பது பெரும்பாலோரின் ஆசை. ஆனால் செத்துப் போனவர்கள் திரும்பி வந்து இந்த சொர்க்கத்தை பற்றியோ நரகத்தைப் பற்றியோ விவரம் கூறிய வரலாறு இல்லை.


  உயிரோடு இருந்து கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களைப் கூப்பிட்டு ’வாருங்கள்

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்’ என்றால் யாரும் சாவதற்கு தயாராக இல்லை. சொர்க்கத்தை பற்றி செவி வழிச் செய்தியாகச் சொல்லப்படும் கதைகளே இதற்கெல்லாம் காரணம். சொர்க்கத்திற்குச் சென்றால் பசி இல்லாமல் வாழலாம், இந்திர சபையை பார்க்கலாம், தேவர்களோடு விளையாடலாம், ரம்பை, மேனகை ஊர்வசி, திலோத்தமை ஆகிய தேவ மாதர்களின் நடனங்களை கண்டுகளிக்கலாம், அவதார புருஷர்களைப் பார்க்கலாம், பேரின்பம் அடையலாம் என்று சொல்லப்படும் கதைதான் சொர்க்கத்திற்கு செல்லும் ஆசையை மனிதர்களுக்கு உண்டாக்கியவை. சொர்க்கத்திற்கு சென்றவர்களை பற்றி ஏராளமான கதைகள் உண்டு. சென்றவர்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

சொர்க்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன? புராண வழியில் சொல்ல வேண்டுமென்றால் சொர்க்கம் மகிழ்ச்சி நிரம்பியது, நரகம் துன்பம் நிறைந்தது. தான தர்மங்கள் செய்வதாலோ, தொண்டு ஊழியம் செய்வதாலோ சொர்க்கத்தை அடைய முடியாது. நியாயமான கடமைகளை வழுவாது எவன் செய்கிறானோ அவனுக்கு சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்ற கதைகளும் உண்டு. சொர்க்கத்திற்கு செல்ல இதுதான் அளவுகோல் என்று எந்த தர்ம சாஸ்திரங்களும் விதியை நிர்ணயிக்கவில்லை. ஆனால் சொர்க்கத்திற்கு செல்ல எல்லோருக்கும் அளவுகடந்த ஆசை உண்டு. பண்டிதர் முதல் பாமரர் வரை இதற்கு விதிவிலக்கில்லை. சொர்க்கமும் நரகமும் படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது எப்படி? படைத்தவன் நீ. நீ படைத்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். உன்னைச் சுற்றி நீ படைத்த உலகம். படைத்த உலகை விட்டு படைக்கப்படாத உலகத்திற்கு ஏன் பயணம் செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் எந்த பூகோள வரைபடமும் இல்லை. இவை மனதளவில் ஏற்ப்பட்ட உணர்வு. இவை எங்கு இருக்கிறது என்பது குழந்தைத்தனமான நம்பிக்கை. மரணத்தை தள்ளிப் போடுவதற்கு ஒரு உபாயம்தான் சொர்க்கமும் நரகமும். உனக்குள் இருக்கும் ஆற்றலை நேர்மையாக செயல்படுத்து. மனிதன் யாசித்தால் நரகம். மனிதன் நேசித்தால் சொர்க்கம். யோசித்தால் சொர்க்கம் உருவாக்கலாம். கற்பனையான இவற்றை நம் கண்முன்னே பார்க்கலாம்.

எல்லோரின் வாழ்வும் சொர்க்கத்தில் உறைந்துள்ளது. சாதி, மதம் நரகிற்கழைக்கிறது.அறிவு இருந்தால் சொர்க்கம்; அறியாமை இருந்தால் நரகம். சொர்க்கமும் நரகமும் படைக்கப்படுவது அல்ல. பார்க்கப்படுவதல்ல. மனிதன் மனிதனையும், மனிதன் மற்றவர்களையும் நேசிப்பதுதான் சொர்க்கமாகும். இருக்கும் வரையில் எல்லா பாவங்களுக்கும் உருவமாக இருக்கும் மனிதன் செத்துப் போன பின்னால் ஏன் சொர்க்கத்திற்குப் போக ஆசை படுகிறான் என்றால் நரகத்தின் வேதனையை தாங்க முடியாது என்பதால் தான். ’வாழும் பூமியே சொர்க்கம்’ என்று நினைத்து தன் வாழ்க்கையை மனிதன் அமைத்து விட்டால் அவன் சொர்க்கத்தையும் தேட வேண்டாம் நரகத்திற்கும் அஞ்சவேண்டாம்.வாழும் பூமியை எப்படி சொர்க்கமாக ஆக்குவது? வாழும் பூமியை பற்றற்ற தொண்டினால் சொர்க்கமாக ஆக்க முடியும் என்ற உணர்வு ஏற்படாத வரை எந்தமனிதனும் சொர்க்கத்தை தேட முடியாது