தொப்புள் கொடி உறவு! 41 ஆண்டுக்கு பிறகு தாயை தேடி வந்த டென்மார்க் டேவிட்! மொழி புரியாமல் நிகழ்ந்த உணர்ச்சிப் போராட்டம்!

41 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துசென்ற தாயை மகன் தேடிவந்து இணைந்துள்ளது சென்னையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் தனலட்சுமி. இவ்விருவருக்கும் 1976-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 3-ஆம் தேதியன்று ராயபுரத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பிறந்துள்ளது. ஏற்கனவே தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்க இயலாமல் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அவ்வப்போது இருவரையும் பெற்றோர் பார்த்து வந்துள்ளனர். 

2 ஆண்டுகள் கழித்து இரு பிள்ளைகளையும் டென்மார்க் நாட்டை சேர்ந்த இருவேறு தம்பதியினர் தத்து எடுத்து கொண்டுள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தம்பதியினர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே ராஜன் என்ற குழந்தை டென்மார்க்கை சேர்ந்த ஒருவரிடமும், சாந்தகுமார் என்ற இயற்பெயரை கொண்ட மற்றொரு குழந்தை டேவிட் என்ற பெயரில் வேறொரு தம்பதியினரிடம் வளர்ந்துள்ளனர்.

டேவிட் பல ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை மாநகருக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய நிறமும், பழக்கவழக்கங்களும் இந்தியர்களிடம் ஒத்திருந்ததை கண்டு குழம்பியுள்ளார். டென்மார்க் சென்றபிறகு தன் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உண்மைகள் அனைத்தையும் கூறியுள்ளனர்.

உடனடியாக டேவிட்டுக்கு தன்னுடைய பெற்றோரை காண வேண்டும் என்ற ஆசை மலர்ந்துள்ளது. உடனடியாக அவர் மும்பை மாநகருக்கு வந்துள்ளார். இங்கு நண்பரின் மூலம் அஞ்சலி பவார் என்ற வழக்கறிஞர் டேவிட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். அவரின் உதவியுடன் பல்வேறு  இடங்களில் தன்னுடைய தாயை தேடி வந்துள்ளார். 

பிஞ்சு வயதில் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து சென்னை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் டேவிட் தன்னுடைய தாயை தேடியுள்ளார். இறுதியாக சென்னையை அடுத்த மணலியில்  தாய் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாக கண்டறிந்த டேவிட் அங்கு சென்றுள்ளார்.

தன் தாயை கண்டவுடன் செய்வதறியாது மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். தன் அண்ணனையும் டென்மார்க் நாட்டில் விரைவில் கண்டுபிடித்து விடுவதாக டேவிட் கூறியுள்ளார். டேவிடுக்கு தமிழ்மொழி தெரியாமலும், அவருடைய தாய்க்கு டேனிஷ் மொழி தெரியாமலும் இருந்தாலும் கண்களால் அவர்கள் அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் அருகில் இருந்தோரை நெகிழ வைத்துள்ளது.