கொரோனாவால் உயிரிழந்த தந்தை..! சடலத்துடன் 16 மணி நேரம் தங்கியிருந்த மகன்! அதிர வைக்கும் காரணம்!

கொரோனாவால் இறந்துபோன தந்தையின் சடலத்துடன் 16 மணி நேரம் மகன் உடனிருந்தது ஸ்பெயின் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 19,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 4,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இத்தாலி நாட்டில் இதுவரை 6,820 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் 3700 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ஸ்பெயின் நாட்டின் இளைஞர் ஒருவர் இந்த நோயால் இறந்த தந்தையின் சடலத்துடன் 16 மணி நேரம் உடனிருந்துள்ளார் என்று செய்தியானது நாட்டில் பரவி வருகிறது.

பெரு நாட்டை பூர்வீகமாக கொண்ட லூயிஸ் பெர்னாண்டோ சமீபகாலமாக தனது தந்தையுடன் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் வசித்து வந்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தோற்று வெகு விரைவாக பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று லூயிஸின் தந்தைக்கு அதிஉயர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனாவின் அறிகுறிகளும் அவரிடம் தென்பட்டுள்ளன.

உடனடியாக அவசர உதவியை லூயிஸ் நாடியுள்ளார். ஆனால் அந்நாட்டின் அவசர உதவி பணியாளர்கள் இந்த அழைப்பை ஏற்கவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் லூயிஸ் அழைத்தபோது, மருத்துவருடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பதாக கூறியிருந்தனர். ஆனால் அதற்குள் அவருடைய தந்தையின் உடல் நிலை மோசமாகி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

3-வது முறையாக தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தியை அவசர உதவிக்கு கூறியபோது, அவர்களோ சடலத்தை விட்டு விலகி இருக்குமாறு லூயிஸை அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் லூயிஸ் தன்னுடைய தந்தையின் சடலத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில், மருத்துவர் ஒருவர் காவல் துறையினருடன் வந்து லூயிஸின் தந்தையின் இறப்பு சான்றிதழை அவரிடம் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் ஒரு தனியார் இறுதி சடங்கு செய்யும் அமைப்பிடம் 2,700 யூரோக்கள் கொடுத்து தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ததாக லூயிஸ் அழுதபடி அளித்த பேட்டியானது அந்நாட்டு மக்களை பெரிதளவில் பாதித்துள்ளது. இந்த சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.