பாலியல் குற்றச்சாட்டில் கம்யூனிஸ்ட் தலைவரின் மகன் - டி.என்.ஏ. டெஸ்ட் என்ன சொல்லப்போகுதோ..?

கொடியேறி பாலகிருஷ்ணன் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.


இவர் 2008ல் கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது துபாயில் நட்சத்திர ஓட்டல் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். அதனால்தான்,இந்தமுறை மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது முதல்வராகும் வாய்ப்பு பினராயி விஜயனுக்கு கிடைத்தது.ஆனாலும் கொடியேறி தவிர்க்க முடியாத சக்தி என்பதால் அவரை கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆக்கினார்கள்.

இப்போது அவர் மகன் பினோய் கொடியேறி சர்ச்சைக் உள்ளாகி இருக்கிறார்.இதற்கு முன்பே ஒரு ஊழல் குற்றச்சாட்டாலும்,ஓரிரு மலையாளப் படங்களில் நடித்தும் பேசப்பட்டு வந்த பினோய் மீது பீஹாரைச் சேர்ந்த பார்டான்ஸர் ஒருவர் ,பினோய்தான் என் மகனின் தந்தை என்று வழக்குத் தொடர்ந்ததால் இப்போது மலையாள செய்தித் தாள்களில் முதல் பக்கத்தை பிடித்திருக்கிறார் பினோய்.2009ல் பார் ஒன்றில் பணியாற்றிய போது பினோயுடன் நட்பு ஏற்பட்டதாகவும்,தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி பலமுறை உறவு வைத்துக் கொண்டதாகவும் அந்த பீஹார் பெண் சொல்கிறார்.

அந்த உறவில் தங்களுக்குப் பிறந்த மகனுக்கு இப்போது ஒன்பது வயதாவதாகவும்,அவனுக்கு பினோய்தான் தந்தை என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.தனது வங்கிக் கணக்கில் பினோய் லட்சக்கணக்கில் பணம் போட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்பித்திதார்.அந்தப் பெண் தன்மீது பொய் புகார் சொல்வதாகவும்,தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் பினோய் சொல்லி வந்த நிலையில்,அவர் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு இரத்த மாதிரியைத் தரவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ,கடந்த செவ்வாய் கிழமை பினோய் தன் ரத்த மாதிரியை போலிசாரிடம் அளித்தார்.சோதனை அறிக்கையை மூடி முத்திரையிட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து விட்டது மும்பை போலீஸ்.இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 26ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அப்போது கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு ஒரு பீஹார் பேரன் இருக்கிறானா இல்லையா என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.முடிவு எப்படி ஆனாலும் , பினோயின் பிரேமகதா மலையாளத்தில் படமாகப் போவது உறுதி.அதிலாவது பினோய்க்கு நாயக வேடம் தருமா,மலையாள சினிமா?