லண்டன் டூ சென்னை! பெற்ற தாயை கொலை செய்ய விமானத்தில் வந்த கொடூர மகன்!

வெளிநாட்டிலிருந்து வந்து பெற்ற தாயையே கொலை செய்து தலைமறைவான இளைஞரை 3 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள பெசன்ட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவர் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவருடைய மனைவியின் பெயர் ரத்தினம். இத்தம்பதியினருக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார். இவர் உடல்நலம் குன்றி 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

கணவனை இழந்த பிறகு பெசன்ட் நகரில் உள்ள சொந்த வீட்டில் ரத்தினம் தனியாக வசித்து வந்தார். பிரவீன் பிரிட்டன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் விடுமுறைக்காக பிரவீன் இந்தியா வந்தார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று மர்மமான முறையில் ரத்தினம் தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார். அதே சமயத்தில் பிரவீனும் தலைமறைவாகி இருந்தார். சந்தேகித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சொத்து பிரச்சினையின் காரணமாக லண்டனிலிருந்து வந்து தன் தாயை பிரவீன் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார் என்பதனை கண்டுபிடித்தனர்.

மூன்று தனி குழுக்களை அமைத்து பிரவீனை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே பிரவீனின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவருக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணியை மே மாதத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். பிரவீன் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்கு அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கினர்.

பிரவீனை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் சைபர்கிரைம் உதவியை நாடினர். இரு பிரிவினரும் ஒன்றிணைந்து ஈடுபட்டதில் பிரவீன் டெல்லியில் தலைமறைவாக இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

டெல்லிக்கு விரைந்து சென்ற சென்னை காவல்துறையினர் பிரவீனை கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இன்று அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவமானது டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.