முட்டைக்கோஸ், காலிபிளவரில் உள்ள தண்டுப்ப்குதியை தூக்கி எறியாதீர்கள், அதை இப்படிச் செய்து பாருங்கள்!

அதிரசம் செய்யும்போது மாவை வெல்லத்துடன் கலந்து, பேரீச்சைத் துண்டுகள், உலர்திராட்சை துண்டுகள், முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். இப்படி செய்தால் அதிரசத்தின் சுவை கூடும்.


எந்த வகை சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் மிகவும் சுவையாக இருக்கும். அதேநேரம் செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும். எந்த வகை சூப் செய்தாலும் அத்துடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்க்கலாம். சூப்பின் சுவை அல்ட்டிமேட்டாக இருக்கும்.

புளியில் புழுக்கள் வருவதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கும். இதை தவிர்க்க புளியில் உள்ள கொட்டைகளை நீக்கி வெயிலில் நன்றாக காய வைத்து காற்று புகாத கண்டெய்னரில் அடைத்து வைத்து உபயோகிக்கலாம். கொட்டை நீக்கிய புளிக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

எலுமிச்சை, நாரத்தை உள்ளிட்ட ஊறுகாய்கள் நீண்ட தினங்கள் ஆகிவிட்டால் அதன் புளிப்புத்தன்மை சற்றே குறைந்து விடும். ஆனால் இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி உப்பைக் கலந்து அதை அப்படியே ஊறுகாயில் போட்டு நன்றாக கிளறவும். இந்த முறையானது ஊறுகாயின் புளிப்பு சுவையை கூட்டிக் காட்டும்.

பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும்போது சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேகவைக்கலாம். இதனால் சாதம் நன்றாக தனித்தனியாக பிரிந்து வெந்துவிடும். முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவரில் உள்ள தண்டுப் பகுதியை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதை பொடியாக நறுக்கி சாம்பாருக்கான காய்கறிகளுடன் சேர்த்து சாம்பார் வைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்துப் பிசைந்தால் கொழுக்கட்டை வேகவைக்கும் போது விரிசல் விழாமல் இருக்கும். இட்லிக்கோ தோசைக்கு அரைத்த மாவு விரைவில் புளிக்காமல் இருக்க, வெற்றிலையின் காம்பைக் கிள்ளாமல் குப்புற இருப்பதைப்போல மாவு பாத்திரத்தினுள் போடவும். இதனால் இரண்டு நாள் வரை மாவு புளிக்காமலும் கெடாமலும் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது, உப்பை துணியில் முடிந்து அதனுள் போட்டு வைத்தால் காரல் வாடை வராது. கருவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் வாடிப் போகாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.