தீர்க்க சுமங்கலியாக இருக்க வழிபட வேண்டிய சில பரிகாரக்கோயில்கள் இதோ...

பெண்கள் அனுஷ்டிக்கும் விரதங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது, தலையானது என்று கூறப்படுவது காரடையான் நோன்பு.


இதை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் கூறுவர். இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதிகம். பொதுவாக கோவில்களில் உள்ள அம்பிகையை தாலி பாக்கியம் நிலைக்க வேண்டி கொள்ளலாம் என்றாலும் அதற்காக வழிபாடு செய்ய சில சிறப்பு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சென்னை முடிச்சூர் (புராணகாலத்தில் இத்தலத்தின் பெயர் மணமுடிச்ச நல்லூர்) பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிவன் விஷ்ணு கோயிலில் அமைந்துள்ள மங்களாம்பிகை சந்நிதியில் தாலி பாக்கியம் கிடைக்கவும், கிடைத்த பாக்கியம் நிலைக்கவும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தைகள் மஞ்சள் கயிறு சாத்தி வேண்டுதல் செய்கின்றனர்.

திருச்சி ஜே.கே நகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில் - இங்கு அன்னை உண்ணாமுலை அம்மன் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் இருகரங்களில் அபய வரத முத்திரை காட்டி அருள்கிறாள். உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இந்த அன்னையிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகின்றனர்.

ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கொண்டுள்ளாள். அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் நோயால் அவதியுற்று படுத்த படுக்கையாக இருந்தார். மன்னனின் நோய் தீர அவன் மனைவி இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் சந்நிதிக்கு வந்து தன் கணவனை காப்பாற்றுமாறு கூறி தான் அணிந்திருந்த தாலிக் கொடியை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு மாரியம்மனை வணங்கி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாள்.

பக்தையின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாரியம்மன் சிற்றரசனை குணமடையச் செய்தாள். தன் மாங்கல்யத்தை காப்பாற்றிய அம்மனை நோக்கி எனது தாலி பாக்கியம் நிலைக்கச் செய்த சுமங்கலி மாரியம்மனே என்று அந்த பக்தை வணங்கியதால் இங்குள்ள மாரியம்மனுக்கு அப்பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

மாரியம்மன் கோவில்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் நடப்பட்டு இருக்கும். அவ்வேம்பு சிவனை குறிப்பதாக ஐதிகம். திருவிழா முடிந்ததும் இந்த வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் சேர்ப்பார்கள். ஆனால் இத்திருத்தலத்தில் உள்ள சிவபெருமானின் வடிவில் இருக்கும் வேம்பு கம்பம் 365 நாட்களும் நடப்பட்டிருக்கும். ஆகையால் கணவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று இத்திருக்கோயிலிலுள்ள அம்மன் போற்றப்படுகிறாள்.

எனவே இத் திருத்தலத்திற்கு வரும் பெண்கள் தங்கள் கணவன் உடல் நலம் பெற வேண்டியும், குடும்பப் பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும், கோயிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் குங்குமம் வைத்து அம்மனை வேண்டி பலன் பெறுகின்றனர்.