ஐயப்பன் மீது காதலுடன் காத்திருக்கும் கன்னித் தெய்வம்! எப்போது திருமணம் நடக்குமாம்?

சபரிமலையில் முதன்முதலில் பரசுராமரே சாஸ்தா கோயில் எழுப்பினார்.


அப்போது தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தையே அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். ஐயப்பன் தமது அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும் சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து தவக் கோலத்தில் அமர்ந்தார். அவரே பிறகு தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமானார். அதன்பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பன் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

சபரிமலை தவிர மேலும் சில தலங்களிலும் கேரளாவில் கோயில் கொண்டிருக்கிறார் ஐயப்பன். குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். ஐயப்பன் பால சாஸ்தாவாக காட்சி தரும் இந்த ஐயப்பனை குட்டி சாஸ்தா என்கிறார்கள்.

ஐயப்பன் இல்லற வாசியாக அதாவது மனைவியுடன் சாஸ்தா தரிசனம் தரும் தலம், ஆரியங்காவு. சௌராஷ்டிர இனத்துப் பெண்ணான புஷ்கலையை தர்மசாஸ்தா இத்தலத்தில்தான் மணந்து கொண்டாராம். இங்கு யானையே ஐயப்பனின் வாகனம்.

அச்சன்கோவில் திருத்தலத்தில் ஐயப்பன் பூரணை புஷ்கலை எனும் இரு தேவியர் சமேதராக தரிசனம் தருகிறார். மாதத்தில் நடத்தப்படும் திருவிழாவின்போது ஐயப்பன் தேரில் உலா வருவார். ஐயப்பன் தேர் உலா வரும் ஒரே தலம் இதுமட்டுமே.

மகரஜோதி திருநாளில் சபரிமலையில் ஐயப்பனுக்கு திரு ஆபரணங்கள் சாத்தப்படுவது தெரிந்திருக்கும். அங்கே கோயில் கொண்டுள்ள மாளிகைபுரத்து அம்மனுக்கும் அதுபோலவே திரு ஆபரணங்கள் உண்டு. ஐயப்பனுக்கு திரு ஆபரணங்கள் எடுத்து வரப்படும் போது அவையும் எடுத்து வரப்படுகின்றன. மகரஜோதி தரிசனம் நிறைவடைந்த பிறகு மேலும் ஆறு நாட்கள் நடை திறந்திருக்கும். அந்த ஆறு நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் நடப்பது மாளிகைபுரத்து அம்மனுக்குத்தான்.

ஆரியங்காவில் இருந்து 20 கிலோ மீட்டரில் உள்ள தலம் மாம்பழத்துறை. தன் மனைவியான புஷ்கலையை இந்தத் தலத்தில் தங்கி இருக்கும்படி சொன்னாராம் தர்மசாஸ்தா. பகவதி அம்மன் என்ற பெயரோடு பத்ரகாளி வடிவத்தில் இங்கே கோயில் கொண்டிருக்கிறாள் புஷ்கலா தேவி.

ராமபிரான் வனவாசத்தின்போது எனது தந்தைக்கும் முன்னோருக்காகவும் பம்பா நதியின் கரையில் தர்ப்பணம் செய்தாராம். அந்த அடிப்படையில்தான் சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்கள் முன்னோருக்காக பம்பைக் கரையில் பித்ரு காரியங்கள் செய்யும் வழக்கம் வந்தது.

ஜகத்குரு ஆதிசங்கர மகானின் தாய்வழி குலதெய்வம் கிராத சாஸ்தா என்கிற வேட்டைக்காரப்பன் எனும் சாஸ்தாவே மேலப்புழா மனா என்ற அவர்களின் பரம்பரை தெய்வம் இந்த சாஸ்தா. இந்த வேட்டைக்காரன் கோலத்தில் ஐயப்பனை எரிமேலியில் தரிசிக்கலாம். வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார் கிராத சாஸ்தா. வேட்டைக்கொரு மகன் என்றும் ஐயப்பனை கூறுகின்றனர்.

சபரிமலையில் ஐயப்பனை தவிர மேலும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பான வழிபாடுகள் நடக்கின்றன. ஐயப்பனை மணக்கக் காத்திருக்கும் கன்னித் தெய்வம் மாளிகைபுரத்து அம்மன், மஞ்சள் மாதா. கன்னிசாமி வராத ஆண்டில் அவளை மணப்பதாக சொன்னாராம் மணிகண்டன். அதற்காகக் காத்திருக்கும் தேவியே மாளிகைபுரத்து அம்மன்.

எல்லாக் கோயில்களிலும் கன்னி மூலையில் கணபதிதான் இருந்தாலும் சபரிமலையில் ஐயப்பன் சன்னதியின் இடப்புறம் கன்னிமூலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் விநாயகரே பிரதானமான கன்னிமூல கணபதி என்று பக்தர்களால் போற்றப்படுவார்.

கொச்சுக் கடுத்தசுவாமி, வலிய கடுத்த சுவாமி என இரு காவல் தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. மலைநடை பகவதி அம்மன் சன்னதியில் விளக்கு ஏற்றுவதையே காணிக்கை என்கின்றனர். அரச மரத்தின் கீழ் அமைந்துள்ள நாகர்களை வழிபடுவது போலவே இங்கே தனிச் சன்னதி கொண்டுள்ள நாகராஜாவை மஞ்சள் பொடியினால் அர்ச்சித்து கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்.

சத்தியமான பொன்னு பதினெட்டாம்படிகளுக்குக் கீழே ஐயப்பனின் தோழரான வாபரின் சன்னதி இருக்கிறது. இஸ்லாமியரால் பூஜை வழிபாடுகள் செய்யப்படும் இந்த சன்னதியில் நெல், மிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் போன்றவற்றை ஐயப்ப பக்தர்கள் அளித்து ஆராதனை செய்வதுண்டு.

மண்டலகாலம் என்று ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு தினத்தன்றும் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம்.