ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
விரதங்களில் உயர்வான ஏகாதசி விரதம்! 30 ஆன்மிக அதிசய குறிப்புகள்!
1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.
4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.
5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.
6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.
7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.
8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.
11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.
12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.
13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.
14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.
15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.
16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.
17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.
18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.
20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.
21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.
23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.
24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.
25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.
26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.
27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.
28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.
30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.