பெண்களுக்காக இத்தனை திட்டங்களா..? பிரசாரக் கூட்டத்தில் புள்ளிவிபரத்துடன் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


பெண்கள் வளர்ச்சிக்காக அம்மாவுடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் வழியில் அரசு இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு ரூ 25 ஆயிரம் மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

ஏழைப் பெண்கள் திருமண உதவிக்காக இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் வழங்காத வகையில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 லட்சத்து 51 ஆயிரம் மகளிருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 25,000 ரூ.50,000 ஒரு பவுன் தங்கம் வழங்கப்படுகிறது.

ஏழைப் பெண்கள் பொருளாதார சூழ்நிலை காரணமாக திருமணம் தடைபட கூடாது என்பதற்காக ஜெயலலிதா மனதில் உதித்த இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறோம். கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை 12000 வரை கொடுத்தார்கள். தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதுவரை 67 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை பயன்பெற்று வருகிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் வளமோடு வாழ வேண்டும் என்பதற்காக 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. இதுவரை 25 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என சென்னை, கோவை தேர்வு செய்துள்ளனர். அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படக்கூடிய அரசு என்பதை நிரூபித்துக்காட்டி வருகிறோம். கருவுற்ற தாய்மார்கள் நலனை மேம்படுத்தும் நோக்கில் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் ரூ. 1 கோடியே 7 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சரானதும் விலையில்லா மிக்சி மின்விசிறி வழங்கபடும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி அனைத்து குடும்பத்திற்கும் வழங்கினார். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.2500 உதவி மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. எந்த மாநிலத்திலும் இதுபோன்று கொடுக்கவில்லை. எம்.‌ஜிஆர். இலவச வேட்டி, சேலை வழங்கினார். ஜெயலலிதா ரூ.100 மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார்.

கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கினோம். இந்த ஆண்டு ரூ.2500 வழங்கினோம். இதனை தடுக்க மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் வெற்றி பெற்று மக்களுக்கு ரூ.2500 வழங்கினோம். கொரோனா காலத்தில் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது‌. ஒரு வருடத்தில் ரே‌ஷன் கார்டுக்கு இதுவரை ரூ.4500 வழங்கியுள்ளோம். ஒரு விவசாயி முதலமைச்சர் என்பதால் உழைப்பாளிகளின் குடும்பம் சந்தோ‌ஷமாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக இதனை வழங்கியுள்ளோம்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இது உங்களுடைய அரசு நீங்கள்தான் முதலமைச்சர். நீங்கள் சொல்வதை நிறைவேற்ற தான் நான் இருக்கிறேன் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.