கிணத்துக்குள்ள பாரேன்..! 8 வயது சிறுமிக்கு அண்ணியால் அரங்கேறிய பயங்கரம்!

மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்காக அண்ணி கைது செய்யப்பட்டிருப்பது காங்கயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே சேமலைவளசு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சீரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருடைய மனைவியின் பெயர் திருமாயி. இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற மகனும், கலைவாணி என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமாயி எதிர்பாராவிதமாக உயிரிழந்தார். அதன் பின்னர் சீரங்கன் 2-வது திருமணத்தை செய்து கொண்டார். திருமாயியின் 2 குழந்தைகளும் அவருடைய மாமியாரின் வளர்ப்பில் வளர்ந்து வந்தன. 

இதனிடையே கலைவாணியின் அண்ணனான கார்த்திக் ஷாமிலி என்ற பெண்ணை வருட தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டார். 17.7.2019 அன்று கலைவாணி திடீரென்று மாயமானார். அவருடைய உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் கலைவாணியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் குடும்பத்தினர் காங்கேயம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காங்கயம் காவல்துறையினர் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கலைவாணி மாயமான தேதியன்று ஷாமிலி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஷாமிலி மீது சந்தேகமிருப்பதாக கலைவாணியின் பாட்டி  காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் ஷாமிலியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. அதாவது கலைவாணிக்கு வலிப்புநோய் இருந்து வந்ததாகவும், இதற்கு கார்த்திக் நிறைய செலவழிப்பதும் ஷாமிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் சம்பவத்தன்று கலைவாணியை கிணற்றில் எட்டிப்பார்க்க வைத்துள்ளார். அப்போது கலைவாணியை கிணற்றில் தள்ளி விட்டுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்று கொண்ட காவல்துறையினர் ஷாமிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.