நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிங்காரவேலர் அன்னை வேல்நெடுங்கன்னி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
வேல் வாங்கி வியர்வை சிந்தும் சிங்கார வேலர்..! அதிசயம் காண சிக்கலுக்கு வாங்க!
அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சிங்காரவேலர் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 28.10.2019-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அதில் பல அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதேபோல தான் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் திருக்கோவிலிலும் பல ஆச்சரியமான தகவல் உள்ளது.
இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.
வசிஷ்டருக்கு ஈசன், பார்வதியோடு காட்சி தந்தார். பார்வதி ஈசனிடம் வெண்ணெய் லிங்கமாக இங்கே இருக்கும் தங்கள் திருமேனி வெப்பத்தால் உருகிப் போய்விடாதா என்று வருந்தினாள். அதற்கு ஈசன் வேல் விழியாளே, எனது திருமேனி வெப்பத்தைத் தணிவிப்பது என்னைப் பிரியாமல் சதா என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் உன் விழி நோக்கு அல்லவா என்னைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினாராம். அதைப் புரிந்து கொண்ட பார்வதி, எம்பெருமானோடு தானும் அங்கே கோயில் கொண்டு வேல்நெடுங்கண்ணி என திருப்பெயர் கொண்டாள்.
அசுரர்களை அழித்து அமரர்களைக் காப்பதற்காக ஆறுமுகன் களத்தில் போரிடும் விவரங்களை அறிந்த வேல்நெடுங்கண்ணியின் தாய்மை உள்ளம் ஆனந்தமடைந்தது. அதே சமயம் மாயையின் மைந்தனான சூரபத்மன் சூழ்ச்சியால் செய்த போர்த் தந்திரங்களைக் கேட்க அவள் உள்ளத்தில் கோபம் கனலாக எழுந்தது. நொடிக்கு நொடி அம்மையின் உடல் வெம்மை கூடிக்கொண்டே போக எல்லோரும் தாமோதரனை அழைத்தார்கள். கோபத்தின் உச்சியில் இருந்த தங்கையைப் பார்க்க ஓடி வந்தார் கோவிந்தன். திருமாலுக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்படி சினத்தால் தகித்தால் உன்னருகே வெண்ணெய் பிரானாக இருக்கும் ஈசன் உருகிப்போய்விடப் போகிறார் என்று கூறினார். அன்னை தாய்ப்பாசத்தில் நான் இதை மறந்து விட்டேனே, என் திருமேனி வெப்பத்தை எப்படித் தணிப்பது என்று கேட்டாள்.
திருமால், தங்கையே உன் தேகம் தகிப்பது சூரபத்மன் மேல் உள்ள சினத்தால். எனவே உன் கண்களால் வெப்பத்தை வெளிப்படுத்து. அதனை ஓர் ஆயுதமாக்கி எடு. அசுரனின் அழிவுக்கு அஸ்திரமாக ஆறுமுகன் கையில் கொடு என்று யோசனை கூறினார். அப்படியே அன்னையும் செய்தாள். வேல் ஆயுதம் பெற்றதால் முருகன் வேலனானான். வேலில் நிறைந்திருந்த அம்மையின் சினத்தீயும், தன் உடலில் நிறைந்திருந்த சிவத்தீயும் ஒருசேர அந்த உஷ்ணத்தின் உக்ரத்தில் பெருகி எழுந்த வியர்வையில் குளித்தான். அதே உக்ரத்தோடு மறுநாள் நடந்த போரில் வேலால் சூரன் உடல் துளைத்தான்.
அன்று நடந்த இந்த அத்தனையும் இன்றும் நீங்கள் கண்முன் காணலாம். ஆண்டுதோறும் சிக்கல் திருத்தலத்தில் நடக்கும் கந்தசஷ்டி திருவிழாவில் விழாவின் முக்கிய அம்சமான சிங்கார வேலன் வேல் வாங்கி வியர்வை சிந்தும் நிகழ்ச்சியைக் காண உலகமே திரண்டு வருகிறது. வேலவன் வியர்வை மழையில் நனையும் அதிசயம் கண்டு சிலிர்க்கிறார்கள்.
சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அனைத்து சிவாலயங்களிலும் இந்த தெய்வீக திருமணம் நடைபெறும். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள நவநீதேஸ்வரர் கோவிலும் திருமணம் நடைபெறும்.
இப்படி வேல்வாங்கி வியர்வை சிந்தும் அதிசயம் சிக்கல் தலத்தில் இன்று மாலை நடக்கவிருக்கிறது.