ரசிகர்களை திருடத் தூண்டும் சிம்பு மீது வழக்கு போட்டால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? – லாயர் கேர்ள்

வாயை வைத்துக்கொண்டு சும்மாவே இருக்கமாட்டார் சிம்பு. அவர் என்ன பேசினாலும் வம்புதான். பால் விவகாரத்தில் அவருக்கு சிக்கல் என்கிறது லாயர் வட்டாரம்.


சிம்பு என்றாலே குழப்பம்தான். ஒரே ஒரு படத்துக்காக மூன்று முறை வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சிம்பு. வந்தா ராஜாவாத் தான் வருவேன் படம் வெளியாகும் நேரம் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவேண்டாம் என்று முதலில் சொன்னார். அப்புறம், எனக்கு இருப்பதே நாலைந்து பேர்தான். அதனால்  பெரிய பெரிய கட் அவுட் படங்கள் வைத்து அண்டா நிறையாக பால் அபிஷேகம் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொடார். அதன்பிறகு மீண்டும் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இப்படி பேசுவது சட்டப்படி குற்றம் ஆகும். எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

இரண்டாவது காணொளியைப் பார்த்து தமிழ்நாடு பால் வியாபாரச் சங்கம் அவர் மேல் வழக்குத் தொடுக்க ஏற்பாடு செய்தது. சிம்பு படத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதற்கு இவர்கள் எதற்காக வழக்கு தொடுக்க வேண்டும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

சட்டம் அறியாமையும் ஒரு வகை குற்றம் ஆகும். அதுவும் ஒரு பிரபலமானவர், நன்கு படித்தவர், தன் பின் பெரிய ரசிகர் கூட்டம் வைத்திருப்பவர் இப்படி சட்டத்தைப் பற்றி அறியாமல் வார்த்தைகள் விடுவது  குற்றம் தானே.

ஏனென்றால், பிரபல நடிகர்களின் முதல் படக் காட்சி அன்று கடைகளுக்கு வெளியே வைத்திருக்கும்  பால் பாக்கெட்டைத்தான் ரசிகர்கள் திருடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது தமிழ்நாடு பால் வியாபாரச் சங்கம். அதுவும் நடிகர்கள் இவ்வாறுக் கூறினால் ரசிகர்களைத் திருடுவதற்குத் தூண்டுவதற்கு சமம். குற்றம் செய்பவரைவிட, குற்றம் செய்யத் தூண்டுபவருக்கு அதிக தண்டனை கிடைக்கும்.

 

திருடுவது குற்றம் என்பது அவருக்கு தெரியும். ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகரின் முதல் படக்காட்சிக்கு இவ்வாறு திருடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்பது அவருடைய முதல் வீடியோவில் இருந்தே தெரிகிறது. அதனை தெரிந்துகொண்டே ரசிகர்களை அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யச் சொல்வது ரசிகர்களை திருடுவதற்கு தூண்டுவதுப் போல் தானே இருக்கிறது.

தவறு என்பதைத் தெரிந்துகொண்டே  ரசிகர்களைத் தூண்டிவிடுவது இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு எண் 107 படி குற்றம் ஆகும். இந்த பிரிவு எண் எந்த ஒரு செயலாவது நேராக அல்லது மறைமுகமாக மக்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதுப் போல் இருந்தால் அவ்வாறு தூண்டுபவரும் குற்றம் செய்தவராகவே கருதப்படுவார் என்று சொல்கிறது.

ஃப்ளெக்ஸில் ஏறி உயிர் விட்ட தொண்டனின் வீட்டுக்குச் சென்று அழும் சிம்பு இதுபோன்ற காரியம் செய்யலாமா? கட் அவுட்டுக்கு பால் ஊற்றுங்கள் என்று சொன்னால், கட் அவுட் மேல் ஏறத்தானே செய்வான்.

இதுதவிர, இப்படி அடிக்கடி மாற்றி மாற்றி ரசிகனைத் தூண்டுவதும் தவறுதான். ஏனென்றால், எல்லா ரசிகனும் எல்லா வீடியோவையும் பார்ப்பார்கள் என்று சொல்லமுடியாது. அதனால் நடிகராக இருப்பவர்கள் அக்கறையுடன் இருக்கவேண்டுமே தவிர, இப்படி குற்றங்கள் செய்யத் தூண்டுபவராக இருக்கக்கூடாது.

சரிதானே ஃப்ரெண்ட்ஸ்

லாயர்கேர்ள்