அடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..?

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் தமிழர்களின் ஒருமித்த கருத்தாக இருந்துவருகிறது. அவர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. ஆனால், இன்னமும் அதன் மீது எந்த முடிவும் தெரிவ்க்கவில்லை.


ஆகவே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, விரைவில் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்றே தெரிகிறது.