வெட்டாதீங்க..வெட்டாதீங்க..! கதறிய மனைவி, மகள்! ஆனால்..? கும்பகோணம் பகீர்!

கும்பகோணத்தில் மனைவி மற்றும் மகள் கண்கள் முன்னே ஒருவரை, மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணம் அருகே திருப்பந்துறை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு செல்வமணி என்பவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 40. இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணியின் நன்னடத்தை காரணமாக அவரது தண்டனை குறைக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த செல்வமணியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்றைய தினம் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் செல்வமணியின் தந்தையை கடந்த 1999ஆம் ஆண்டு நொண்டி சந்துரு என்பவர் கொலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து தன் தந்தையை கொலை செய்தவரை பழி வாங்கியே ஆக வேண்டும் என்பதற்காக கடந்த 2000ம் ஆண்டு செல்வமணி நொண்டி சந்துருவை கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. சிறையில் நன்னடத்தை உடன் இருந்து வந்ததால் செல்வமணியை கடந்த 2018 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவித்து உள்ளனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த செல்வமணி இறைச்சி கடையை நடத்தி கொண்டு தன்னுடைய குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பொழுதில் செல்வமணியின் வீட்டிற்கு அருகே சிலர் மது அருந்தி உள்ளனர். அதனைப் பார்த்த செல்வமணி மது அருந்திய நபர்களை திட்டியிருக்கிறார். உடனே அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்று மேலும் சிலரை அழைத்து வந்துள்ளனர்.

உடனே அவர்கள் அனைவரும் இணைந்து செல்வமணியை அவரது மனைவி மற்றும் மகள் கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இவர்கள் அரிவாளால் வெட்டிய பொழுது செல்வமணியின் மனைவி மகாலட்சுமி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் இணைந்து அந்த மர்ம நபர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இருப்பினும் எதையுமே காதில் வாங்காத அவர்கள் செல்வமணியை வெட்டியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த செல்வமணி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து உள்ளதா.. அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.