வேட்டி கட்டிய அம்மா யாருன்னு தெரியுமா? வேற யாரு பன்னீர்தானாம்! காமெடி அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்!

அமைச்சர்கள் வாயைத் திறந்தால் புதுப்புது அறிவிப்புகள் வரும் என்பது அந்தக் காலம். எந்த அமைச்சர் என்ன ஜோக் சொல்வாரோ என்பதுதான் இந்தக் காலம். ஒருவரையொருவர் விஞ்ச வேண்டும் என்பதற்காக தினம் ஒன்றாக பேசி வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.


அந்த வகையில் ராஜேந்திரபாலாஜிக்கு டப் ஃபைட் கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார் செல்லூர் ராஜூ. இதுவரை பன்னீருக்கு பக்கபலமாக இருந்துவந்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும்தான். இப்போது அவரை மிஞ்சிக்கொண்டு பன்னீருக்கு பலமாக ஜால்ரா போட்டிருக்கிறார் செல்லூர் ராஜூ. 

கூட்டுறவுத் துறை கடன் வழங்கும் விழா தேனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பன்னீருடன் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் கலந்துகொண்டார். செல்லூர் ராஜூவும், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனும் கலந்துகொண்டனர். ஏதாவது வில்லங்கமாகப் பேசுவார் செல்லூர் ராஜூ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

ஓ.பி.எஸ். என்பதற்கு நான் சொல்றதுதான் சரியான விளக்கம் என்றவர் ஓ. என்றால் ஒற்றுமை, பி. என்றால் பாசம் எஸ் என்றால் சேவை என்றார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, பன்னீர்செல்வத்தை வேட்டி கட்டிய அம்மா என்றும் புகழ்ந்தார்.

ம்.. இதைக் கேட்ட அந்த அம்மா இல்லையேப்பா..!