தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை! பட்டிவீரன்பட்டி பரபரப்பு!

பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கஞ்சா பதுக்கி இருப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர்அந்த தோட்டத்தில் மோட்டார் அறை மற்றும் அதன் அருகில் சுமார் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் அந்த தோட்டத்தில் இருந்த சரவணன் (வயது 29), நிலக்கோட்டை சித்தர்கள் நத்தத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (30), முத்துராஜ் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதும், அதனை பட்டிவீரன்பட்டி பகுதியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.