நெல்லை கண்ணன் கைது! தமிழுக்கும் தமிழர்க்கும் நேர்ந்த அவமானம்! சீமான் அதிரடி கருத்து!

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நெல்லையில் உள்ள மேலபாளையம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பற்றி ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இவரின் சர்ச்சைக்குரிய பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனால் கோபம் அடைந்து பாஜகவினர் நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று போலீசிடம் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணனின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் நேற்று திடீரென மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய தயங்கினர்.இந்நிலையில் நேற்று இரவு பெரம்பலூரில் உள்ள ஒரு விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நெல்லைக்கண்ணனின் கைது தமிழுக்கும் தமிழர்க்கும் நேர்ந்த அவமானம் என்று கூறிய சீமான் , மேடைப் பேச்சுக்களுக்கு எல்லாம் கைது என்று முடிவு எடுத்துவிட்டால் பாஜக தலைவர் யாரும் வெளியில் இருக்க தகுதியற்றவர்கள் எனவும் சீமான் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள நெல்லை கண்ணன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அவரை விடுதலை செய்ய வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.