சிதம்பரம் ரகசியம் போலவே ஆலங்காட்டு கோயிலிலும் ரகசியம் உண்டு... என்னவென்று தெரியுமா?

திருவள்ளுவர் மாவட்டம், திருவாலங்காடு நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபையாக விளங்குகிறது.


சிதம்பர ரகசியம் போலவே ஆலம் காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது. காரைக்கால் அம்மையார் ஈசனை தரிசிக்க கைலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்ற பொழுது சிவபெருமான் அவரிடம் அம்மையே உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு காரைக்கால் அம்மையார் பிறவாமை வேண்டும் பிறந்தாலும் உனது நடன தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும் என்றார். சிவபெருமானும் அப்படியே வரமருளினார்.

இவ்வேளையில் மன்னன் ஒருவன் கனவில் தோன்றிய ஈசன் தனது சன்னிதிக்குப் பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சன்னிதி அமைக்கும்படி கூறினார். அதன்படி மன்னன் நடராஜருக்கு பின்புறம் அம்மைக்கு ஒரு சன்னிதி எழுப்பினான். அதில் காரைக்கால் அம்மையார் ஐக்கியமானார். அம்மை, அங்கே ஈசன் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.

பெருமாள் கோவில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால் சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர். நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் ஆடியபோது அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்கு சென்றனர். சுவாமி தனது தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார். இதன் அடிப்படையிலேயே இக்கோயிலில் தீர்த்தம் தரப்படுகிறது.

நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர். சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள். இதனால் அவளுக்கு 'சமிசீனாம்பிகை' என்று பெயர் சூட்டப்பட்டது. 'இதற்கு ஆச்சரியம் அடைந்தவள்' என்று பொருள். இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.