செங்கொடி நினைவுநாள் நிகழ்ச்சியில், ஏழு பேர் விடுதலைக்கு சீமான் போராட்ட அறிவிப்பு

செங்கொடி நினைவு நாளையொட்டி எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவிப்பு செய்துள்ளது.


மூன்று தமிழர்களின் இன்னுயிர் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது பெருங்கனவான எழுவர் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்கும் நிகழ்வாக பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை அழைப்பு விடுத்து இருந்தது. 

அதன்படி இன்று முன்னெடுக்கப்பட்ட செங்கொடி நினைவேந்தல் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகளுடன் இணைந்து பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் , 7 தமிழர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய தங்கை செங்கொடியின் நினைவுநாள் இன்று. 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவதே செங்கொடியின் பெருங்கனவாக இருந்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர்.

ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது. ஆளுநர் இருக்கை என்பது இரக்கமற்ற இதயம் கொண்டவர்களின் இருக்கை என்றாகி விட்டது என்று சீமான் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மகளிர் பாசறையினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவைப்போற்றியும், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏழு தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், நீண்ட காலமாக ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் எழுவர் விடுதலை கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #WeDemand7TamilsRelease என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் (Twitter) இக்குறிச்சொல் இன்று அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

இது பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் எழுவர் விடுதலைக் கோரிக்கைக்கு பெரும் ஆதரவை உருவாக்கியுள்ளது.