சேத்து வச்ச காச வச்சி மழை நீர் சேமிப்பு தொட்டி! நெகிழ வைத்த நெல்லை சிறுமி!

தான் சேமித்து வைத்த பணத்தின் மூலம் வீட்டில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டிய மாணவியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

இத்தம்பதியினருக்கு ஹரிப்பிரியா என்ற மகள் உள்ளார். இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே மழைநீரின் மகத்துவத்தையும் அதனை சேமித்து வைப்பதன் முக்கியத்துவத்தையும் ஹரிப்ரியா அறிந்துள்ளார்.

இதனால் பெற்றோர் தனக்கு செலவுக்காக கொடுக்கும் சிறு சிறு தொகையையும் சேமித்து வைத்துள்ளார். 3,500 ரூபாய் வரை சேமித்த போது தன் பெற்றோரிடம் வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்ட வேண்டும் என்ற தன் ஆசையை கூறியுள்ளார்.

உடனடியாக பெற்றோர் குழந்தையின் ஆர்வத்தை புரிந்துகொண்டு மழை நீர் சேகரிப்பு தொட்டியை கட்டி முடித்தனர். இதனைக் கேள்விப்பட்ட புளியங்குடி மக்கள் மாணவியை பாராட்டி வருகின்றனர். இவருடைய முயற்சியை அறிந்த மாவட்ட கலெக்டரான ஷில்பா பிரபாகர் சதீஷ் புளியங்குடி அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது ஹரிப்பிரியாவை நேரில் சந்தித்து மனமார வாழ்த்தினார்.

இந்த சம்பவமானது நம் அனைவருக்கும் மழை நீரின் முக்கியத்துவத்தை அறிய வைத்துள்ளது.