ரஜினி மன்றத்துக்குத் திரும்புகிறார் சத்யநாராயணன்... இளவரசனை அடுத்து ஸ்டாலினும் அவுட்..?

ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ, அவரது மன்றத்தில் சேர்த்தல், நீக்கலுக்கு மட்டும் பஞ்சம் இல்லை. இத்தனை நாட்களும் ஏராளமான நிர்வாகிகளை நீக்கிவந்த இளவரசனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார் ரஜினி. அடுத்து யார் என்பதுதான் கேள்வி.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் இந்த இளவரசன். அ.தி.மு.க.விலிருந்து விலகியிருந்த டாக்டர். இளவரசனை ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளராக நியமித்தார் நியமித்தார் ரஜினிகாந்த். இவர் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் என்பதுடன் டாக்டர் ராமதாஸ்க்கும் நெருக்கமானவர். இப்படி சகல கட்சியினருடனும் நல்ல உறவில் இருந்ததால் இளவரசனை  மன்றத்தில் சேர்த்தார் ரஜினி. இளவரசனுக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

கட்சியைத் தெரிந்த அளவுக்கு ரஜினி பற்றியும் ரஜினி ரசிகர்கள் பற்றியும் இளவரசனுக்குத் தெரியவில்லை. அதனால் பணக்காரர்களை நிர்வாகிகளாகப் போட்டு சாதாரண ரசிகர்களை மன்றத்தில் இருந்து வெளியேற்றினார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் இதுபோன்ற அதிரடிகள் தேவை என்று ரஜினிகாந்தையும் நம்பவைத்தார்.

மன்றத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசிகர்கள் இளவரசனை சந்திக்க வந்தால், ரஜினியிடம் கேட்டுவிடுத்தான் உன்னை தூக்கியிருக்கிறேன்... அதனால் அமைதியாக போய்விடு என்று எச்சரித்து அனுப்பிவிடுவாராம். தலைவரே போகச்சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் வருத்தத்தில் வாடினார்கள். இதை நம்பாத ஒருசில ரசிகர்கள் ரஜினிக்கு தொடர்ந்து புகார் கடிதம் கொடுத்துவந்தனர். இவருக்கு மன்றத்தின் நிர்வாகிகளான ஸ்டாலின் மற்றும் ராஜசேகரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால், ரஜினி விசாரணை நடத்துகிறார் என்றதும் ராஜசேகரும், சுதாகரும் அப்ரூவராக மாறிவிட்டனர். எல்லாமே இளவரசன் வேலை என்று காட்டிக்கொடுத்து விட்டார்களாம். 

அதனால்தான் எந்த விளக்கமும் கேட்காமல் இளவரசனிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கி, அதனை வெளியிட்டுவிட்டார். அடுத்து இந்தப் பொறுப்புக்கு யாரை நியமனம் செய்வது என்பதுதான் ரஜினியின் தீவிர யோசனை. யாரைப் போட்டாலும் பிரச்னை வருகிறது என்பதால், ரஜினி மன்றத்தின் ஆரம்பகால நிர்வாகி சத்யநாராயணனை மீண்டும் நியமிக்க நினைக்கிறாராம்.

ஆனால், சத்யநாராயணன் சிறிது உடல்நலக் குறைவில் இருக்கிறார். மேலும் ரஜினியிடம் கோபப்பட்டு ஒதுங்கியிருக்கிறார். அவரை எப்படியேனும் கொண்டுவந்துவிட நினைக்கிறார் ரஜினி.

ரஜினி பேசினால் அவர் நிச்சயம் வந்துவிடுவார் என்கிறார்கள். அவர் வந்துவிட்டால் ரஜினி மன்றம் மீண்டும் சூடுபிடித்து விடுமாம்.

அதெல்லாம் சரி, தேர்தலில் நிற்கப்போவதில்லை எனும்போது மன்றத்தை வைத்து என்னதான் செய்யப்போகிறார் ரஜினி?