சத்தியம் டிவியில் ஒருவருக்கு கொரோனா உறுதி..! உள்ளே புகுந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்! ஒளிபரப்பு நிறுத்தப்படுமா?

சத்தியம் டிவியில் பணியாற்றி வந்த உதவி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து சத்தியம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் தினகரன் நாளிதழில் பணியாற்றி வருபவர். மற்றொருவர் சத்தியம் டிவியில் பணியாற்றி வருபவர்.

தினகரன் நாளிதழை பொறுத்தவரை கொரோனா உறுதியான நபர் செய்தியாளர் ஆவார். சத்தியம் டிவியில் பணியாற்றிய நபரோ உதவி ஆசிரியர் ஆவார். அதாவது சத்தியம் டிவிக்குள் அமர்ந்து பணியாற்றும் நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் அவர் பணியாற்றிய சத்யம் டிவி அலுவலகத்தில் உள்ள அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும் சத்தியம் டிவி அலுவலகத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். பொதுவாக ஒரு நிறுவனத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவனம் சீல் வைக்கப்படும்.

அந்த வகையில் சத்தியம் டிவிக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பொருட்டு தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு கேள்விக்குறியாகிவிடும். அதே சமயம் கொரோனா உறுதியான நபரை அறிகுறி தென்பட்ட உடனேயே அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று தொலைக்காட்சி நிறுவனம் கூறிவிட்டதாகவும் எனவே தங்கள் நிறுவனத்தை சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சத்தியம் தொலைக்காட்சி நிர்வாகம் கூறி வருகிறது.