சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை..! ரகசியத்தை யாரிடமும் சொல்லிடாத மக்கா..! அதிர வைக்கும் போலீஸ் ஆடியோ!?

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பற்றி பகிர் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


சாத்தான்குளத்தில் அரசடி வினாயகர் கோயில் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜ் (வயது 58) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு பென்னிக்ஸ் (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கு விதிகளை இவர்கள் பின்பற்றாமல் கடையைத் திறந்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதைப்பற்றி தகவல் அறிந்ததும் அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையை பார்ப்பதற்காக அந்த காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறார்.

 காவல் நிலையத்தில் போலீசார் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அவரது மகன் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத்தொடர்ந்து பென்னிக்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விடவே அங்கு அவரை போலீசார் காவல்நிலையத்தில் இருக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயராஜும் அவரது மகனும் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக பணியாற்றும் ஒருவருடன் அவரது நண்பர் உரையாடும் ஆடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. ஆடியோவில் பேசும் அந்த நபர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு குற்றச்சாட்டு தொடர்பாக அழைத்து வரப்படும் அனைவரையும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் அடித்து உதைப்பார்கள் என்று அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக தற்காலிக ஊழியர்களாக காவல்துறைக்கு உதவுவதற்காக பணியாற்றுபவர்களையும் அழைத்து சிலரை அடிக்க அனுமதிப்பதாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அன்று நான் வேலைக்கு செல்லவில்லை எனவும் அவர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சாத்தான் குளத்துக்கு அருகே உள்ள பேய் குளத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் ஒருவர் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு சரமாரியாக அடிக்க பட்டதாகவும் அவர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். மேலும் அடிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக அழைத்துவரப்பட்டு போலீஸாரால் அடிக்கப்பட்ட மற்றொருவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பற்றியும் அவர் பேசினார்.

இந்த உரையாடலில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் போன்று பேசும் அந்த நபர் அவரது நண்பரிடம் நான் சொன்னதாக எதையும் வெளியே சொல்லிடாத மக்கா என அந்த ஆடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த ஆடியோவில் பேசும் நபர்கள் யாரென்றும், இந்த ஆடியோ உண்மைதானா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.