எடப்பாடிக்கு திடீரென காவடி தூக்கும் சரத்குமார்! தூத்துக்குடி தொகுதிக்கு குறி!

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வரும் 28 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு பற்றி அறிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியதாவது, நல்லதை பாராடுவது சமத்துவ மக்கள் கட்சியின் பிரதான நிலைபாடு. அந்த வகையில் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளோம். தலைமையை இழந்த ஒரு மாபெரும் இயக்கத்தின் ஆட்சியை ஏற்ற முதலமைச்சர் பழனிசாமி 2 ஆண்டு காலம் தாக்குபிடித்துள்ளது அவரது திறமை.

அவர் ஒரு வாரமோ இரண்டு வாரமோதான் தாக்கு பிடிப்பார் என நினைத்தவர்களுக்கு தற்போது பிரமிப்பாக இருக்கலாம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டம் எல்லாம் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை. எனவே தேர்தலை முன்வைத்து அவர்கள் நடத்தும் ஒரு செயலாகவே இதை பார்க்க முடியும். 

பொதுக்குழு மற்றும் உயர்மட்ட குழு ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு நான் தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பது குறித்து அறிவிப்பேன். பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்காது. பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியிலும் சமத்துவ மக்கள் கட்சி நிச்சயம் இடம் பெறாது.

இடைத்தேர்தல் பதவி காலம் இன்னும் ஒன்றரை ஆண்டே உள்ள நிலையில், இப்போது இடைத்தேர்தல் நடத்தினால் முழுமையான மக்கள் சேவையை அவர்களால் அளிக்க இயலாது. எனவே 21 தொகுதி இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்பதே எனது கருத்து. மூன்றாவது அணி கூட்டணி அமைத்தால் அதற்கு முழு ஆதரவு சமத்துவ மக்கள் கட்சி அளிக்கும்.

சரத்குமார் பா.ஜ.கவை விமர்சித்தாலும் அ.தி.மு.கவை பாராட்டியுள்ளார். அதற்கு காரணம் எடப்பா பழனிசாமியை காக்கா பிடித்து தூத்துக்குடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாம் என்பதால் தான் என்கிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமியின் திறமையை வெளிப்படையாக சரத்குமார் பாராட்டியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.