பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை! சரத் பவார் அதிரடி கருத்து!

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவை சார்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் . மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றதன் விளைவாக தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

துணை முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் நான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் என்றும் எப்போதுமே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தான் என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருக்கிறார்.

 பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி மகாராஷ்டிராவில் சிறப்பான ஆட்சியை புரியும் என்று நம்புகிறேன் என்று அஜித் பவார் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.

அஜித் பவாரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிரடியாக கூறியிருக்கிறார். 

மேலும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக ஒருமனதாக முடிவு செய்ததாகவும் அந்த பதிவில் சரத்பவார் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் பவாரின் இந்த ட்விட்டர் பதிவு தவறான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சரத்பவார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.