சங்கரன்கோவில் ஆடித்தவசு வழிபாடு! சைவமும் வைணவமும் கலந்திருக்கும் அற்புத திருத்தலம்.

தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று.


இங்கு கோமதியம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி அளிக்கும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும்.

"தபஸ்' என்றால் "தவம்' அல்லது "காட்சி' எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.

ஸ்ரீசங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிடைத்ததை உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த 2019ம் ஆண்டு ஆடி தபசுக்கான கொடியேற்றம் ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 3ம் தேதி கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யபடுகிறது. இன்று ஆகஸ்ட் 13ம்தேதி ஆடித்தபசு காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும் மாலையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள்.

இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்பாள் வீதி வலம் வருகிறாள். அம்பாளுக்கான விழா என்பதால் 9ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11ம் நாள் காலையில் யாக சாலை மண்டபத்தில் கோமதி அம்பாள், ஸ்ரீசங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும் நடக்கிறது. தொடர்ந்து கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள். ஆடி பவுர்ணமி தினத்தில் மாலையில் உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாக , தபசு கோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார். இது ஸ்ரீகோமதி அம்பாளுக்கான மிக முக்கியமான விழா, இதுவே சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் சிறப்பு.