மீனாட்சி அம்மன் கோவில் கருவறையில் நுழைந்த துப்புரவு பணியாளர்கள்..! வரலாற்றில் முதல்முறை..! ஏன் தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறையில் நுழைந்து சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்றுபரவுவதை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறையில் நுழைந்து சுகாதாரத் துறை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக இருந்து வரும் ஒருவரின் தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. 71 வயதான அந்த பெண்மணி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.

உயிரிழந்த பெண்மணியின் மகன்கள் இருவரும் கோவில் அர்ச்சகர்கள் என்றாலும் அவர்கள் கடந்த சில நாட்களாகவே கோவிலுக்கு செல்ல வில்லை என்று கூறப்பட்டு வருகிறது. எனினும் அர்ச்சகர் வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் கோவிலில் பணியாற்றியதால் இரண்டு நாட்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஒன்றாக இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறையில் சுகாதார துறை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.