குபேரன் அருள் வேண்டுமா? சங்கநிதி, பத்மநிதிக்கு வணக்கம் சொல்லுங்கள்!

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர்தான், அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன்.


800 வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் கருணைப் பார்வைக்கு ஆளாகினார், லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு, லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். குபேரர் சிறந்த சிவபக்தர், அமைதியான நீதிமான், ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி என்பதாலேயே.. இந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சிவபெருமானால் அங்கீகாரம் பெற்றவர்.

ஈசனின் கட்டளைப்படியும், லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால்.. அவருக்கு திருமகளின் வெண்சங்கும், கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன.

அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி, தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

தேவாரத்தில் அப்பர் சுவாமிகள், சங்கநிதி, பதுமநிதியைக் குறித்துள்ளார். மகாலட்சுமியின் வாயிலில் சங்க்நிதியும், பத்மநிதியும் இருப்பதாகக் கூறுவர். இதைக் குறிக்கும் வகையில் ஆலயங்களின் வாயில்களில் இரண்டு யக்ஷர்களை சங்கையும், தாமரையையும் தாங்கியவாறு அமைத்துள்ளனர். ஆலயங்கள், அரண்மனைகள், வீடுகள் ஆகியவற்றின் வாயிலின் மேலே மகாலட்சுமியையும் வாசற்படிகளின் இருபுறத்திலும் சங்கநிதியையும், பதுமநிதியையும் அமைக்கும் வழக்கம் பெருமளவில் உள்ளது.

பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ.. சற்று உயரமான இடத்திலோ அமைக்கப் பட்டிருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களை மேலிருந்து கவனித்து பார்த்து, பக்தரின் நடை, உடை, பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும், அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து, எவ்வளவு அறிவுச் செல்வத்தையும், எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின், ஈசனின் வரப்படி, அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

அறிவுச் செல்வமோ.. பொருள் செல்வமோ.. சங்க நிதி, பத்மநிதி இவர்கள் கணக்குப்படிதான் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை அறியாமலேயே.. நாம் இவர்களை பொம்மையாகவும், பூதகணங்களாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கேட்டது கிடைக்க ஈசன் உண்டு. தேவைகளை உணர்ந்து சரியாய்த் தெரிவிக்க, இந்த சங்கநிதி மற்றும் பத்ம நிதியின் தயவு தேவை. இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும், மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி, பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது.

இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு, தூய ஆடை அணிந்து, வம்பு தும்பு பேசாமல், இறை சிந்தனையுடன், பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.