சாண்ட்ரா - பிரஜின் ஜோடியின் ட்வின்ஸ்க்கு முதல் பர்த்டே..! ஊரடங்கு நாளில் எப்படி கொண்டாடினார்கள் தெரியுமா?

சென்னை: பிரஜின், சாண்ட்ரா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளுக்கு முதல் பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, டிவி, சினிமா பிரபலங்கள் உள்பட அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனினும், ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் அனைவரும் தங்களது இல்ல நிகழ்வுகளை தனிமையில் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர், திருமணத்தைக் கூட 10, 15 பேருடன் எளிய முறையில் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், டிவி பிரபலமான சாண்ட்ரா எமி மற்றும் பிரஜின் பத்மநாபன் தம்பதியினர் தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு, முதல் பிறந்த நாளை கொண்டாடினர்.

கடந்த ஆண்டு, இவர்களுக்கு மித்ரா மற்றும் ருத்ரா எனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அன்புடன் தனது மகள்களை பராமரித்து வரும் பிரஜின் தம்பதியினர், நேற்று, அவர்களின் முதலாவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதோடு, இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்திகளை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

பிரஜின் வெளியிட்ட பதிவில், ''ஒரு அம்மா, அப்பாவாக எங்களுக்கு இது மிகவும் மறக்க முடியாத தருணம்... எங்களது தேவதைகளுக்கு முதலாவது பிறந்த நாள் வாழ்த்துகள். நன்றி கடவுளே,'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, சாண்ட்ரா எமி வெளியிட்ட பதிவில், ''இந்த ஓராண்டு இவ்வளவு வேகமாகச் சென்றுவிட்டது. அதனை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. கடந்த ஓராண்டு முழுக்க ஏகப்பட்ட ஆசிர்வாதங்கள், அன்பு, மகிழ்ச்சி, வேதனை, களைப்பு என அனைத்தும் நிறைந்திருந்தன. அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளோம்.

எங்களது குழந்தைகள் பிறந்த பிறகுதான் யாரையும் நாம் சார்ந்திருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக கொண்டுள்ளோம். எந்த உறவினரும், குடும்பத்தினரும் இல்லாமலேயே எங்களால் வாழ முடியும் என்பதை எங்களின் குழந்தைகள் எங்களுக்கு உணர்த்தியுள்ளனர். எந்த உறவினரும் இன்றி நாங்கள் தனிமையில் தற்போது உள்ளோம். இந்த தனிமையுடனே எங்களது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறிக் கொள்கிறோம்,'' என்று குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, சாண்ட்ரா எமி, பிரஜின் காதல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.