திருச்சி சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
வருகிற மார்ச் 8 முதல் மகமாயிக்கு பூச்சொரிதல் விழா! உலக நாயகி சமயபுரத்தாளின் உலக நன்மைக்கான பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்!

அன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 7 மணிக்கு மேல் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.
சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க சாதித்தவள், சாதித்து வருகிறவள், சாதிக்கப் போகிறவள், வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து கொண்டு இருப்பவள், முக்காலங்களிலும் முதன்மை பெற்றவளாம் மகமாயின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.
மாதுளம் பூ நிறத்தவள்,சிரசில் ஐந்து தலை நாகராணிகள் குடை பிடிக்க, தங்கக் கிரீடம் தாங்கி குங்குமச் சிவப்பு நிறத்தில் புன்சிரிப்புடன் பார்க்கும் அவளை காணும் பொழுது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.
அம்பாளின் திருமுகத்தில் சிவ திலகமாக முன்று திருநிறு கீற்றாக வைரக்கல்லோடு நடுவில் சகோதரர் திருவரங்கனின் பிறந்த வீட்டு ஞாபகமாக நாமம் போன்ற மரகதகல்லோடு காட்சி அளிப்பதை பார்க்கும் யாவரும் பரவசம் அடைவது நிச்சயம். காதில் வைர நட்சத்திர காதணி பௌர்ணமியில் இரண்டு நிலவை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒளிர்கிறது . முக்கில் வைரமுக்குத்தியும், வைர வளையமும் மேலும் அவளுக்கு பேரழகு கூட்டுகிறது.
இத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன அவள் வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன அவள் இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே எலுமிச்சை மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை கீழே வைத்தபடி வீற்றிருக்கிறாள்.
மாயா என்ற அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் சண்டன் என்ற அசுரன் தலை, இடப்பக்கம் முண்டன் என்ற அசுரன் தலையென, வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் அகந்தையை அழித்த தலைகளோடு சுகாசினி கோலத்தில் காட்சி தருகிறாள். பச்சை, சிகப்பு, என்று அவள் விரும்பும் நிறத்தில் சேலை உடுத்தி அவள் பார்க்கும் பார்வையில் செய்த பாவங்களும் தவிடு பொடியாகிடும்.
நாள்தோறும் திருவிழாதான் அவளுக்கு. எனினும் அவளுக்கு மிகவும் பிடித்த விழா பூச்சொரிதல் விழாவே. வருடந்தோறும் மாசி கடை ஞாயிறு முதல் பங்குனி கடை ஞாயிறு வரை பச்சை பட்டினி இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அன்னையே 28 நாட்களும் பக்தர்களுக்காக கடும் தவம் இருக்கிறாள். இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியங்கள் கிடையாது. உண்ணாநோன்பு மேற்கொள்ளும் அன்னைக்கு உப்பில்லா நீர்மோரும், கரும்பு பானகமும், இளநீர் மற்றும் குளிருட்டும் கனிவகைகள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
வரும் மார்ச் 8 முதல் மகமாயி உலக ஜீவராசி நன்மைகளுக்காக பச்சை பட்டினி விரதமிருப்பாள். 28 நாட்களும் அவள் திருமுகத்தில் கடுமையான கோபம் தெரிவது போலிருந்தாலும் அவள் பார்வையும் புன்சிரிப்பும் மீண்டும் மீண்டும் அவளை பார்க்க வைக்கும்.