பக்தர்களுக்காக விரதம் இருக்கும் மாரியம்மன்..! நோய்களில் இருந்து விடுதலை பெற தரிசனம் செய்யுங்க!

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலின் பிரதான பண்டிகை மாசி மாத பூச்சொரிதல் திருவிழா.


பொதுவாக பக்தர்கள்தான் தெய்வத்தை வேண்டிக்கொண்டு விரதம் இருப்பார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் தனது பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள். ஆம், தனது பக்தர்களை எந்த நோயும் தாக்காமல் இருக்கவும், அவர்களுக்கு எந்த தீங்கும் வராமலிருக்கவும் மாசி மாத பூச்சொரிதலின்போது, 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். அந்த விரத நாட்களில் துள்ளுமாவு, இளநீர், நீர்மோர், கரும்பு, பானகம் மட்டுமே நிவேதிக்கப்படுகிறது.

பூச்சொரிதலின் முதல் நாள் அண்ணன் ஸ்ரீரங்கநாதரிடமிருந்து வருகிற பூக்களே அம்மனுக்கு முதலில் அர்ப்பணிக்கப்படுகிறது. இதனை கோயில் யானை எடுத்து வருமாம். பிறகு பக்தர்கள் கூடை கூடையாக கொண்டு வருகிற பூக்கள் சொரியப்படுகிறது. பூச்சொரிதலின்போது அருள்மிகு சமயபுரம் மாரியம்மனின் உடன் பிறந்தவர்களாக கொள்ளப்படும் பிற ஐந்து மாரியம்மன்களுக்கு விழா எடுக்கப்படுகிறது. முதல் பூ சமயபுரத்தாளுக்கும் பிறகு ஒவ்வொருவராக அன்பிலூர் மாரியம்மன், நார்த்தமலை மாரியம்மன், சோமரசன்பேட்டை மாரியம்மன், பூசாரிப்பட்டி கன்னிமாரம்மன் மற்றும் பாலக்காடு மாரியம்மன்களுக்கு பூச்சொரியப்படுமாம்.

அம்மை நோய் வரும்போது உடலில் முத்து முத்தாக பூக்கும். இதை எடுக்கும் சக்தி உள்ளவள் சமயபுரத்து மாரியம்மன்தானாம். மற்ற மாரியம்மன்கள் அவளிடம் முறையிட்டுதான் பக்தர்கள் குறை தீர்ப்பார்களாம். எனவே சமயபுரம் மாரியம்மனுக்கே முதல் பூச்சொரிதலாம்.

மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும்போது பக்தர்களும் அதே விரதத்தை மேற்கொள்கிறார்கள். 28 நாட்கள் கழித்து மாரியம்மன் விரதம் முடிக்கும் போது பக்தர்களும் விரதம் முடிக்கிறார்கள். பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகிறார்கள்.

பூச்சொரிதல் முடிந்தவுடன் ஊரிலுள்ள அனைத்து வேப்பமரங்களும் அரும்பத் துவங்கினால், மாரியம்மன் வெற்றிகரமாக விரதம் முடித்து நோய்க் கிருமிகளை விரட்டி விட்டாள் என்பது ஐதீகமாம். இன்றுவரை பூச்சொரிதல் முடிந்தவுடன் வேப்பமரங்கள் அரும்பத் துவங்கும் அதிசயம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள் சமயபுரம் பகுதி மக்கள்.