கமகம சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யுங்கள்! இன்னும் சில சுவையான சமையல் குறிப்புகள்!

வெங்காய அடை செய்யும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வதக்கி மாவில் கலந்து அடை வார்த்தால் அடையின் மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும் ருசியும் நாவில் நீர் ஊறவைக்கும்.


தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க குழம்பை சிறுது நேரம் பிரிட்ஜில் வைக்கலாம். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதை நீக்கிவிட்டு குழம்பை சூடு செய்து பயன்படுத்தலாம். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி பொரித்த பின் நீண்ட நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவி எடுத்தால் போதும். தோலுடன் சமைப்பதே சிறந்தது. இது போன்று சீவி எடுத்த தோலையும் நறுக்கி வதக்கி புளி மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிடலாம். பொதுவாக இந்த பழக்கம் கேரளாவில் அதிகம்.

சாம்பாரின் ருசியை அதிகரிக்க வெறும் வாணலியில் 150 கிராம் துவரம்பருப்பு, ஒரு டம்ளர் உளுந்து, தலா 200 கிராம் சீரகம், மிளகு, முக்கால் டம்ளர் சாப்பாட்டு அரிசி, தலா அரை டம்ளர் சோம்பு, வெந்தயம், கடுகு, சிறிதளவு பெருங்காயம், கால் கிலோ காய்ந்த கறிவேப்பிலை, முக்கால் கிலோ தனியா, 200 கிராம் விரலி மஞ்சள், ஒரு கிலோ சிவப்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுக்கவும்.

இறுதியாக அனைத்தையும் ஒன்றாக கலந்து நைசாக அரைக்கவும். இந்தப் பொடியுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து நன்றாக கிளறி காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பொடி ஒரு மாதம் வரை கெடாது. இதில் தேவையான அளவு எடுத்து சாம்பார் வைக்கலாம். இதன் சுவையும் மணமும் நம் நாக்கின் சுவை அரும்புகளை சுண்டி இழுக்கும்

காய்கறியில் உள்ள பூச்சி மருந்து பெஸ்டிசைஸ் உள்ளிட்ட கெமிக்கல் போக, காய்கறியை கழுவும் நீரில் அரை எலுமிச்சம்பழத்தை பிழியவும். இந்த நீரில் சுத்தம் செய்ய விரும்பும் காய்கறியை 10 நிமிடம் ஊற வைத்தால் காய்கறியில் உள்ள கெமிக்கல் போய்விடும்.

பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். பலாக்காய் பெரும்பாலும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். ஆகையால் காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும் காரமும் சேர்த்து சமைத்து அதனுடன் சிறிது புளிப்பும் மிளகாய்வற்றல் அல்லது பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளலாம். இப்படி சமைத்தால் பலாக்காயின் தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.

பாகற்காய் உடல் சூட்டை உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியதாக இருந்தாலும் இதனுடன் பருப்பு, தேங்காய் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். கசப்பும் தெரியாது.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது முதலில் மாவுடன் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துப் பிசையவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். இதனால் மாவு மிருதுவாக இருக்கும். தேய்க்கும்போது கைகளிலும் கட்டையிலும் ஒட்டாமல் இருக்கும். அதேநேரம் சப்பாத்தியை தோசைக்கல்லில் சுடும்போது அதிகமாக எண்ணெய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. சூடு ஆறிய பின்னரும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.