டீ குடிக்க திடீரென பைக்கை திரும்பிய இளைஞன்! சர்வீஸ் சாலையில் அசுர வேகத்தில் வந்த கார்! பிறகு நேர்ந்த பகீர் சம்பவம்!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி, 30 அடி தூரம் வரை ஸ்கூட்டர் இழுத்து செல்லப்பட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை விருகம்பாக்கத்திற்கு அருகேயுள்ள நடேசன் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 49. இவர் மருத்துவத்துறையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் வண்டலூர் பகுதிக்கு விற்பனைக்காக சென்றிருந்தார். பணியை முடித்துவிட்டு மாலையில் விருகம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது தேநீர் அருந்துவதற்காக சர்வீஸ் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பினார். அப்போது துரதிஷ்டவசமாக குன்றத்தூர் நோக்கி வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் 30 அடி தூரத்திற்கு ஹெல்மெட் பறந்து சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை சிறிது தூரத்திற்கு கார் இழுத்து சென்றுள்ளது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து உடனே தப்பி சென்றுவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடன் விரைந்து வந்த காவல்துறையினர் லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.