திருமணமான ஐந்தே நாள்..! காதலனை பிரிந்து பெற்றோருடன் சென்ற இளமதி..! சுயமரியாதை திருமணத்தில் அடுத்த திருப்பம்!

திருமணமான ஐந்தே நாளில் காதலனுடன்போக விருப்பம் இல்லை என் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறிவிட்டு இளமதி சென்றுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் செல்வன். பவானி குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் இளமதி. இவர்களில் செல்வன் பட்டியலினத்தை சேர்ந்த தலித். இளமதி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஒரே இடத்தில் பணியாற்றிய போது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இளமதி பெற்றோர் தலித் இளைஞரை தங்கள் மகள் திருமணம் செய்வதை விரும்பவில்லை.

இதனால் செல்வன் தனது காதலி இளமதியை அழைத்துச் சென்று திராவிட விடுதலை கழக நிர்வாகி ஈஸ்வரன் முன்னிலையில் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஈஸ்வரன் வீட்டில் தங்கியிருந்த செல்வன் - இளமதி தம்பதியை அங்கு சென்று இளமதியின் தந்தை காரில் அழைத்துச் சென்றார்.

தடுக்க முயன்ற திராவிட விடுதலை கழக நிர்வாகி ஈஸ்வரனையும் மற்றொரு காரில் அவர்கள் அழைத்துச் சென்றனர். மணமக்கள் மற்றும் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரன் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் மணமகன் செல்வன் மற்றும் திராவிட விடுதலை கழக நிர்வாகி ஈஸ்வரனை மட்டுமே மீட்டனர்.

இளமதி என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதற்கிடையே தனது மனைவி கடத்தப்பட்டதாக செல்வன் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இளமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜாதி வெறியர்களால் இளமதி உயிருக்கு ஆபத்து என்று திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். திமுக எம்பி செந்தில், நாடாளுமன்றத்தில் இளமதி விவகாரத்தை எழுப்பினார்.

இதனால் இளமதி எங்கே என்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. உச்சகட்ட பதற்றம் நிலவி வந்த நிலையில் திடீரென வழக்கறிஞர் ஒருவருடன் இளமதி மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

தகவல் அறிந்து அங்கு வந்த திராவிட விடுதலை கழக அமைப்பினர் காவல் நிலையம் சென்றனர். இளமதி மிரட்டப்பட்டுள்ளதாகவும் தங்களை அவருடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரச்சனை செய்தனர். இதனை அடுத்து இளமதி சம்மதித்தால் பேசலாம் என போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் இளமதியோ தான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு பெற்றோருடன் செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.

இளமதியை ஐந்து நாட்களாக மிரட்டி அழைத்து வந்துள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திராவிட விடுதலை கழகத்தினல் வலியுறுத்தினர். இதற்கிடையே ஐந்து நாட்களுக்கு முன்னர் செல்வனை திருமணம் செய்த இளமதி தற்போது அவர் வேண்டாம் பெற்றோருடன் செல்வதாக கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.