ராகு கால பூஜையில் மூலவர் மீது நாகம் வரும் அதிசய கோயில்! எங்கு?

அனைத்துப் பேறுகளையும் அளிக்கக்கூடியது அம்மன் வழிபாடு இதற்கு பெயர் பெற்ற மாவட்டமாக ஈரோடில் அந்தியூருக்கு தெற்கேயுள்ள சின்னத்தம்பி பாளையத்தில் கோயில் கொண்டுள்ளாள் சக்தி மாரியம்மன்.


இந்த அம்மன் சந்நிதியில் சீட்டு எழுதிக்கட்டி வேண்டிக் கொண்டால் காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைப்பது பலரது அனுபவம். பொருள் கிடைத்தவுடன் கட்டிய சீட்டை உரிய முறையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த ஊரிலோ சுற்றுவட்டாரத்தில் யாராவது புது வாகனம் வாங்கினால் அதை இந்தக் கோவிலுக்கு கொண்டு வந்து நிறுத்தி பூஜை செய்து வழிபடுகின்றனர். அதனால் அந்த வாகனமும், அதை ஓட்டுபவரும் எந்த விபத்திலும் சிக்குவதில்லை என்பது நம்பிக்கை.

இந்த ஊரின் பெயர் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். கடும் தவம் இயற்றிய அவர், தேவர்களாலும் மனிதர்களாலும் உயிர் இழக்கக் கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் இருந்து பெற்றார். வரம் கிடைத்ததும் அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. ஒரு அசுரன் போல அனைவரையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கினார். இதனால் தேவர்கள் திருமாலிடம் சென்று தங்களைக் காக்க வேண்டினர் அவர் ஈசனுடன் இணைந்து ஒரு பெண் சக்தியை உருவாக்கினார்/

அந்த தேவி அரக்க குணத்துடன் இருந்த துறவியை வதைத்தாள் என்றும் தனது தவறை உணர்ந்த துறவி அன்னையின் காலடியில் விழுந்து சரணடைந்தார் என்றும் பின்னர் இந்தப் பகுதியில் அவள் எழுந்தருளி மக்களின் இன்னல்களை தீர்க்க வேண்டும் என்றும். தனது பெயரால் இப்பகுதி அழைக்கப்பட வேண்டும் என்றும் வேண்ட சக்தி மாரியம்மன் கோயில் கொண்டு அருளும் தலம் சின்னத்தம்பி பாளையம் என அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது என்றும் இக்கோயில் தல வரலாறு சொல்லப்படுகிறது.

பிரகாரத்தில் தல மரம் வில்வம் காணப்படுகிறது. அதன் கீழே தனி சந்ததியில் ஆறடி உயரத்தில் மகாலட்சுமி அருள்கிறாள். அருகே பழமைமிக்க நாமதேவப் பெருமாள் சன்னதி உள்ளது. அர்த்தமண்டபம், மகா மண்டபம், கருவறை, முன் மண்டபம் வெகு நேர்த்தியாக திகழ்கின்றன. எதிரே சிம்ம வாகனமும் பலிபீடமும் தூரிக்கல்லும் அழகுற அமைய கருவறையில் சக்தி மாரியம்மன் சாந்தித்யமிக்க தெய்வமாக தரிசனம் தருகிறாள்.

சக்தி மாரியம்மனுக்கு தொடர்ந்து 12 வாரங்கள் ராகு காலத்தில் நெய் விளக்கு அல்லது எலுமிச்சை மூடி விளக்கு ஏற்றினால் சர்ப தோஷம் உட்பட சகல தோஷங்களால் ஏற்பட்ட தடைகள் நீங்கி மணப்பேறு மற்றும் மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

ராகுகால வேளையில் மூலவர் திருமேனி மீது நாகம் ஒன்று வீற்றிருக்கும் அதிசயத்தை அடிக்கடி காணலாம் என்று சொல்கிறார்கள் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள். ராகு காலம் முடிந்ததும் அது எங்கோ சென்று மறைந்து விடுகிறதாம். திருமணம் நிச்சயக்கப்பட்ட ஆணும் பெண்ணும் இந்த ஆலயத்திற்கு வந்து தங்கள் வாழ்வு சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய வேண்டும் என்றும் அதற்கு நேர்த்திக்கடனாக ஏதேனும் தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. அதனால் அவர்களது வாழ்வு சுபிட்சமாகவும், சந்தோசமாகவும் அமைகிறதாம். பின்னர் தம்பதி சமேதராக இங்கு வந்து தங்கள் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தினமும் ஒரு அலங்காரத்தில் அன்னை தரிசனமளிப்பாள். 7ஆம் நாள் பெரிய யாக குண்டத்தில் தானியங்களை தெளித்து பாலிகை வளர்ப்பார்கள். அது முப்பத்தாறு மணி நேரத்தில் வளர்ந்துவிடும். பின்னர் யாக பூஜைகள் நடைபெறும். பத்தாம் நாள் அந்த பாலிகையை எடுத்து அம்மனின் பாதத்தில் அர்ப்பணித்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள்.

பகைவர்களிடமிருந்து, விஷ ஜந்துகளிடமிருந்து, அம்மை. காலரா. வைசூரி போன்ற நோய்களிடம் இருந்து காப்பவளாகவும், தக்க சமயத்தில் மழை பெய்து மண்ணையும், மனதையும் குளிர வைக்கும் சத்தி மாரியம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பங்குனி உத்திர விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இவ்விழாவை காண சின்னத்தம்பிப் ஆலயத்தை சுற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் என் குடும்பத்தோடு வருகிறார்கள்.

திருவிழாவில் கடைசி நிகழ்வான அக்னி கரகம் எடுக்கும் விழா நாளன்று ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றிலிருந்து பூச்சூட்டியில் அக்னியைப் பற்ற வைத்து சுமார் 6 கி.மீ தூரத்தில் உள்ள அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு அன்று மாலை ஆறு மணிக்கு இவ்வாலயம் வந்து சேர்வார்கள். அப்போது வாணவேடிக்கைகளும், மேளதாளங்களும் அமர்க்களப்படும். ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.

பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது இங்கு அளிக்கப்படும் விபூதி பிரசாதம்.