ஸ்ரீசாயி நாதனை தரிசிக்கவேண்டிய முறை என்ன தெரியுமா?

இறைவனை தரிசிக்கவும், நமது கோரிக்கைகளை தெரிவிக்கவும் ஒவ்வொரு மதத்திலும் நிறையவே வழிமுறைகள் உண்டு. ஆனால் பாபாவை தரிசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அன்பைப் பெறவும் மந்திரங்களோ, வேதவிற்பன்னர்களோ தேவையில்லை. நேருக்கு நேர் பாபாவை தரிசிக்கவும், அவர் மேனியைத் தொட்டு நம் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் முடியும். ஆம், இதனை தனது சத்சங்கத்தில் பாபாவே சொல்லியிருக்கிறார்.


‘’எவரிடமிருந்தும் மந்திரத்தையோ, உபதேசத்தையோ பெற முயற்சிக்காதீர்கள். உங்களுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான ஒரே பொருளாக என்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பரமார்த்த நிலை என்ற ஆன்மிக இலக்கை அடைவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முழு மனதுடன் என்னைப் பாருங்கள். பதிலுக்கு நான் உங்களைப் பார்க்கிறேன்.

இந்த மசூதியில் உட்கார்ந்தபடி நான் உண்மையைப் பேசுகிறேன். உண்மையைத் தவிர வேறு எதையும் நான் கூறுவதில்லை. சடங்கு, சம்பிரதாயங்களோ, ஆறு சாஸ்திரங்களில் தேர்ச்சியோ தேவையில்லை. உங்கள் குருவிடம் பற்றும் உறுதியான நம்பிக்கையும் வையுங்கள். குருவே செயல்படுகிறவர் அல்லது செய்யவைக்கிறவர் என்பதை நம்புங்கள். குருவின் மேன்மையை அறிந்து, அவரையே ஹரிஹர பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் அவதாரமாக கருதுபவரே ஆசிர்வதிக்கப்பட்டவர்’’ என்கிறார் பாபா.