தாயின் இறுதி சடங்கை முடித்தவுடன் தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பு பணியில் உடனடியாக ஈடுபட்டுவரும் செய்தியானது பெரம்பலூரில் வரவேற்பு பெற்று வருகிறது.
திடீரென இறந்த தாய்! தகனம் செய்த அடுத்த நிமிடம் கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய துப்புரவு தொழிலாளி! பெரம்பலூர் நெகிழ்ச்சி!
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள வி.களத்தூர் என்ற கிராமத்தில் ஏற்கனவே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீர் ஆகிவிட்டார். ஆனால் அவருக்குப் பிறகு அந்த ஊரில் பணியாற்றிவந்த காவலர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த ஊர் சுற்று வட்டாரத்தில் அடுக்கடுக்கான பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
இதே கிராமத்து பஞ்சாயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அய்யா துரை என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாய் அங்கம்மாள் கடந்த 10 நாட்களாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அங்கம்மாள் இயற்கை எய்தினார். அங்கம்மாள் உயிரிழந்ததை அறிந்த அய்யாதுரை மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
பின்னர் குறைவான நபர்களுடன் அங்கம்மாள் உடலை அய்யாதுரை அடக்கம் செய்தார். ஆனால் அடக்கம் செய்த சில மணி நேரத்திலேயே மீண்டும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகம் முழுவதும் மக்கள் தற்போது இந்த கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு சேவை செய்வதை தவிர்த்து விட்டு, அம்மா இறந்ததை நினைத்து துவண்டு விட மனம் இடம் கொடுக்கவில்லை. ஆதலால் உடனடியாக தூய்மை பணிக்கு திரும்பினேன்" என்று பெருமையாக கூறினார்.
அய்யாதுரையின் கடமை உணர்ச்சியை பாராட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.