குழந்தைகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பதற்கான வழிமுறைகள்!

தீபாவளி என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடுவது வழக்கம்.


தீபாவளி நன்னாளில் அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்துவிட்டு பெரிய பெரிய வெடிகளை வெடிப்பது தான் வழக்கமாக கொண்டாடி வருகிறோம். இந்த செயலில் குழந்தைகள் ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. அவர்களும் புத்தம் புது ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிப்பது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்தகைய சின்னஞ்சிறு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெற்றோர்களாகிய நாம் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. 

முதலில் பட்டாசுகளை நல்ல தரமானதா என்று பார்த்து வாங்கவேண்டும். வாங்கிய பட்டாசுகளை குழந்தைகள் எளிதில் எடுக்க முடியாத இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் குழந்தைகள் அதனை எடுத்து விபத்தில் சிக்கி கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. 

பட்டாசு வெடிக்கும் இடத்தில் கை குழந்தைகளோ அல்லது வயதில் முடிந்தவர்கள் இருந்தால் அங்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் மிகவும் அச்சமடைய அதிக வாய்ப்பு உண்டு. அதேபோல் வயதில் முதிர்ந்தவர்களுக்கு நோய்வாய்ப்பட வாய்ப்புகள் இருப்பதால் இதனை தவிர்ப்பது நல்லது. வீசிங் உள்ள குழந்தைகள் முன்பு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு பட்டாசு மூலம் வெளிவிடும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அவர்கள் மிகவும் மெல்லிய காட்டன் ஆடைகளை அணிந்தும் கால்களில் கட்டாயம் செருப்பையும் அணிந்திருக்க வேண்டும். அதேபோல் பட்டாசுகளை குறுகிய இடங்களிலோ அல்லது வண்டி வாகனங்களுக்கு அருகிலோ வெடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நன்கு விசாலமான இடத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் மணலும் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரும் அருகில் வைத்திருப்பது மிகவும் நல்லது. 

ஒருவேளை பட்டாசு வெடிக்கும் பொழுது குழந்தைகளின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை நல்ல சுத்தமான நீரை வைத்து கழுவ வேண்டும். இதனையடுத்து அனைத்துப் பட்டாசுகளும் வெடித்த பின்பு குழந்தைகளின் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இத்தகைய முன்னேற்பாடு எச்சரிக்கைகளை மேற்கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.