சாபத்துக்கும் தோஷத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? பரிகாரம் இதோ!

சாபம் மற்றும் தோஷத்தால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல், பல பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.


ஆனால் எது செய்தால் சாபம், தோஷம் தீரும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

‘தோஷம்' என்றால் ‘குற்றம் அல்லது குறை’ எனப்படும். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் 2 காரணங்களால் உருவாகுகிறது. அதாவது கோபம், சாபம்.

’கோபம்’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ‘கோபம்’ என்பது பாதிக்கப்பட்டவர் அதற்கு காரணமானவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

’சாபம்’ என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

கோபம் நான்கு வகையாக இருக்கிறது.

1. ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும்.

2. 2 நாழிகை, அதாவது 48 மணி நேரம் நீடிக்கும்.

3. கோபம் - ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.

4. கோபம், அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை உள்ளுக்குள் வளர்த்து விடும்.

கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் போன்ற 8 தீய குணங்கள் தோன்றுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. 1-ல் சூரியன் சுட்டெரிக்கும் கோபம். நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்ம காரன் சூரிய பகவானே. 1-ல் செவ்வாய் அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய். 1-ல் சனி இருப்பது நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான். அதனால் தான் அவர் துலாத்தில் உச்சம் அடைகிறார்.

சனி, செவ்வாய் இருவரும் ராகு-கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது. திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும், ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு, மீள முடியாத விளைவை தருகிறது. ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு. சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல.

சாபம் பெற்றவர் தான் செய்தது தவறு என உணராத வரை, அந்த தோஷத்திலிருந்து விடுபடவே முடியாது. அதே போல் தீங்கிழைத்தோர், அது தவறு என உணர்ந்து, தீங்கிழைக்கப்பட்டோரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அதற்கு அவர் மன்னிப்பு கொடுத்தால் மட்டுமே சாபம் நீங்கும்.

நான் என்ன தவறு செய்தேன் என உணராமல், அதனால் தொடரும் பாவம் தான் தோஷம். அது இந்த காலத்தில் அல்லது முன் ஜென்மத்தில் கூட ஏற்பட்டுத் தொடரலாம்.

போன பிறவியில் பசுவையும், கன்றையும் பிரித்துவிட்ட பாவம், கோ - சம்ராட்சணம் செய்தால் ஓரளவு அதன் கடுமையிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும் முற்றிலும் நீங்கிவிடாது.

நாம் என்ன பாவம் செய்தோம் என்பது தெரியாததால், அதை போக்கிக்கொள்ள சிவனை நாடுவது சிறந்தது. அடிக்கடி சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதுதான் நம் பாவங்களை போக்கி நல்வினைகளை அதிகரிக்கும்.

கடவுள்களுக்கே சாபம், தோஷம் இருந்தால் அதை தீர்க்க சிவபெருமானை வணங்குவது வழக்கமாக உள்ளது. நாமோ சாதாரண மனிதர்கள், சிவாலங்களுக்கு சென்று வழிபடுவதும், தர்ம காரியங்களை செய்வதும் சாபம், தோஷத்திலிருந்து நம்மை காப்பாற்றும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.