தீ பிடிக்காது! மொபைல் சார்ஜர்! ஆம்னி பேருந்துகளுக்கு சவால் விடும் SETC!

அரசு போக்குவரத்துக் கழகம் என்றாலே பராமரிப்பற்ற பேருந்துகள், கிழிந்த, இடவசதியற்ற இருக்கைகள், தாமத பயணம் என எதிர்மறைக் கருத்துக்களே நிலவிவந்த நிலையில் கட்டண உயர்வு மேலும் ஒரு பின்னடைவானது.


கட்டணத்துக்கேற்ற அதிநவீன சொகுசு வசதிகள், குறித்த நேரத்தில் சென்றடைவது உள்ளிட்டவற்றால் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கே பயணிகளின் ஓட்டு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அரசுப் பேருந்துகளுக்கான வரவேற்பை அதிகரிக்க நவீன சொகுசுப் பேருந்துகளை தற்போது  SETC இயக்கி வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு, கர்நாடகாவைச் சார்ந்த எம்.ஜி.ஆட்டோமோடிவ்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு அதிநவீன `லீரா' எனும் புதிய குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன..

பெரிய முன்புறக் கண்ணாடி, தானியங்கி கதவுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டேஷ் போர்டு கேமரா, ABS பிரேக்ஸ் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த வகை பேருந்துகளில் நல்ல இடவசதி கொண்ட டிரைவர் கேபின், GPS, மைக் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 

15 படுக்கைகள் 30 இருக்கைகள், டிரைவர் கேபின் உட்பட முழுமையான ஏசி கேபின் கொண்ட இந்தப் பேருந்துகளில் , மொபைல் சார்ஜிங் பாய்ன்ட், ரீடிங் லைட்ஸ், பாதுகாப்பு சிறப்பம்சங்களாக CCTV கேமரா, அவசரக்கால அழைப்பு, எமர்ஜன்சி டோர் என  தனியார் பேருந்துகளையும் விஞ்சும் வசதிகள்  இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் உட்புறம் எளிதில் தீ பற்ற முடியாத பாகங்களால் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்துகள் ரெஜிஸ்டிரேஷனுக்காகக் காத்திருக்கும் நிலையில், இரண்டு சொகுசுப் பேருந்துகளை சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் இயக்கிய பின் மற்ற வழித்தடங்களில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.