நெல்லை கண்ணன் கைதால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழலலாம்..! எஸ்டிபிஐ அமைப்பின் பகீர் அறிக்கை!

தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் கைது! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல்


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய பாஜக அரசின் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்ட நடவடிக்கைக்களுக்கு எதிராக, கடந்த டிச.29, 2019 அன்று, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், நெல்லை கண்ணன் அவர்கள் வன்முறையை தூண்டிவிட்டதாக பாஜகவினர் திட்டமிட்டு செய்திகளை பரப்பி, அவர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது. 

தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையானது மக்கள் விரோத பாஜக அரசின் செயல்பாடுகளை தேசப்பற்றோடு சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருந்தது. அவரின் உரை பாஜக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளின் மீதான கோபமும், விரக்தியும், அறச்சீற்றமுமாகவே இருந்ததே தவிர, எள்ளளவும் அதில் உள்நோக்கம் என்பது கிடையாது. 

ஆனால், வன்முறையை தூண்டும் கொலைவெறிப் பேச்சுக்களை பேசுவதையே வழக்கமாக கொண்ட பாஜக உள்ளிட்ட இத்துத்துவா அமைப்புக்கள், ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் உரையை தேச விரோதமாக சித்தரித்து அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. 

உள்நோக்கத்துடன் வன்முறை மேடைப் பேச்சுக்களை பேசிய பாஜகவின் ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் மீது பல்வேறு புகார்கள் ஏராளமாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்யாமல், மாறாக ஆட்சி அதிகாரம் கொண்டவர்கள் என்பதற்காக பாஜகவினரின் அழுத்தத்திற்கு அஞ்சி கைது நடவடிக்கை நடந்துள்ளது. இதன் காரணாமாக மிகப்பெரிய அநீதி அவருக்கு இழைக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக நெல்லை கண்ணன் அவர்களை தமிழக காவல்துறை விடுதலை செய்ய வேண்டும். ஏற்கனவே இருதய நோயாளியாக உள்ள அவருக்கு போதுமான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். 

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.