நவராத்திரி திருவிழாவில் கொலு எவ்வாறு வைக்கப்படவேண்டும் தெரியுமா?

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது .


நவராத்திரி விழாவில் பக்தர்கள் தங்களது இல்லங்களில் ஒன்பது படிகள் அமைத்து கொலு வைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . அந்த ஒன்பது படிகளில் எந்த மாதிரியான கொலு பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதை பற்றி நாம் காண்போம்.

கொலு மேடையின் முதல் படியில் ஓரறிவு உயிர்களான செடி,கொடி,தாவரங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும் .

கொலு மேடையின் இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை , சங்கு போன்ற பொம்மைகள் வரிசைப்படுத்தி வைக்கப்படவேண்டும் .

கொலு மேடையில் மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட உயிரினங்களான கரையான் , எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும் .

நான்கறிவு உயிரினங்களான நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும் .

கொலு மேடையின் ஐந்தாவது படியில் ஐந்தறிவு உயிரினங்களான விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து கொலு மேடையின் ஆறாவது படி அலங்கரிக்கப் படவேண்டும் .

மனிதர்களைத் தாண்டி உயர் நிலை அடைந்த சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளை 7வது படியில் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், தேவதைகள் ஆகியோரின் பொம்மைகளை வைத்து எட்டாவது படி அலங்கரிக்கப் படவேண்டும் .

சரஸ்வதி ,லட்சுமி, பார்வதி போன்ற முப்பெரும் தேவிகள் , பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற முப்பெரும் தேவர்களின் பொம்மைகளையும் வைத்து அவர்களுக்கு நடுவே ஆதிபராசக்தியின் பொம்மை வைத்து ஒன்பதாவது படியை அலங்கரிக்க வேண்டும்.